தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathippurai [ S.Agathiyalingam ]


திருவருட்பா
 
முதல் திருமுறை
 
முதல் தொகுதி
 
பதிப்புரை
 
 
 

    ‘இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்து நின்றேன்

     பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதுமின்றே

     இருப்பாழ் செய்யும்உன் கழலடிக்கே யிக்கடையவனைத்

     திருப்பா யெனிலென் செய்கேன் தணிகாசலத் தெள்ளமுதே.’
 

 
 
  --- --- --- ---திருவருட்பாட்பாட்பா.
 

தித்திக்கும் தீந்தமிழ்ப் பாடல்களாம் திருவருட்பா பாடல்களை, எத்திக்கும் புகழ்மணந்து எழில் ஓங்கச் செய்வது தமிழ் மகனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயலாகும். அடிகளார் பாடிய அருள்மிகு பாடல்களில் ஆன்மநேய ஒருமைப்பாடே அரிதின் இலங்கக் காணலாம். இந்திய ஒருமைப் பாட்டிற்கு முயன்றுவரும் இந்நாளில் வள்ளலார் அன்றே ஆன்மநேய ஒருமைப்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ள அழகினைக் காணும்போது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகின்றது. இவ்வருட் பாடல்களில் காணப்படுகின்ற கோட்பாடுகளை அன்றையத் தமிழர்கள் அறிந்து கொள்ளாமையை வள்ளலாரே “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” எனக் கையற்றுக் கூறுகின்ற தொடர் நம் உள்ளத்தைத் தொடுகின்றது. அவர்தம் உள்ள நிலையையும் உயர்ந்த குறிக்கோளையும், இத்தமிழகம் ஒரு கலங்கரை விளக்கம் போல நின்று ஒளி செய்து உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. இதனை உள்ளத்துக் கொண்ட பெருவள்ளல் பொள்ளாச்சி திரு. நா. மகாலிங்கம் அவர்கள் அருட்பாவின் ஆறுதிருமுறைகளையும் அழகுறத் திருந்திய பதிப்பாக வெளிக்கொணர்ந்தது நாமெல்லாம் பாராட்டற்குரியது.

அருட்பாவின் அரும்பெரும் கருத்துக்களாகக் காணப்பெறுகின்ற நன்முத்துக்களை உரையென்னும் கருவி கொண்டே பலராலும் உணர இயலும். அவ்வகை முயற்சியினை இத்துறையின் முன்னாள் பேராசிரியர், உரைவேந்தர் திரு. ஒளவை. சு. அவர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் செய்து வைத்த அரும்பெரும் பணியை, இந்நாள் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்கள் செப்பம் செய்து உதவினார்கள். அவர்கள் இருவரையும் தமிழுலகம் என்றும் நினைக்கக் கடமைப் பட்டுள்ளது.

இந்நூல் வெளிவரத் துணைபுரிந்த இரு பெருமக்களை நாம் நினைவு கூர்தல் வேண்டும். ஒருவர் தொழிலதிபர் திரு நா. மகாலிங்கம் ஆவார். மற்றொருவர் நம் இணைவேந்தர் டாக்டர். ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் ஆவார்கள். அவ்விரு பெருமக்கட்கும், தமிழ்த்துறையின் சார்பில் என் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன். ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து அரும்பெரும் கழகமாக விளங்குகின்ற இப் பல்கலைக்கழகப் பொன்னாளில் இந்நூல் வெளியிடப் பெற வேண்டுமென ஆவலுடன் தூண்டுகோலாய் விளங்கிய துணைவேந்தர் உயர்நீதிமன்ற நீதிபதி வ. சொ. சோமசுந்தரம் அவர்கட்கு என் நன்றி என்றும் உரியதாகும்.
 

S. அகத்தியலிங்கம்,

தமிழ்த்துறைத் தலைவர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:11:19(இந்திய நேரம்)