Primary tabs
புராணத்தை நைமிசாரண்யத்து இருடிகளுக்குக் கூறுகின்றான் என்று இந்நூலாசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.
இக்காரணத்தால், இத்தணிகைப் புராணம் ஒரு மொழி பெயர்ப்பு நூலென்றே கூறுவாருமுளர். அங்ஙனமாயின் "மொழி பெயர்த்தல் யாப்பான் நூல் செய்துரைப்பான் புகுந்த ஆசிரியர் வேறு படச் செய்துரையார்" (சிவஞானமுனிவர் சிவஞானபோதம் சூத்திரம் - 11) எனவும், "அவ்வாறு மொழிபெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத்தும் விரித்தும் தொகை விரியாகவும் செய்ததனாற் பயனில்லை தமிழர்க்கும் ஆரியர்க்கும்;" (பேராசிரியர், தொல். மரபு. 97) என்றும் சான்றோர் பலரும் கூறுதற்கிணங்கக் கச்சியப்ப முனிவரும் சங்கர சங்கிதையின் பிற்பகுதியிலே இத்தணிகை மான்மியம் கிடந்தவாறே இத்தணிகைப் புராணத்தை அதர்ப்பட மொழிபெயர்த்தனர் என்னல் வேண்டும்; வேண்டவே இத்தணிகைப் புராணத்தின்கட் கிடந்த பொருளெல்லாம் சங்கர சங்கிதையினுங் கிடந்தனவாம். அங்ஙனமாயின், இந்நூலிற் கிடந்த சைவசித்தாந்தம் அனைத்தும் அச் சங்கர சங்கிதையின்கண்ணிருந்தே கச்சியப்ப முனிவர் மொழி பெயர்த்தனர் என்பது போதரும். அம்மட்டோ? இத்தணிகைப் புராணத்தில் இந்நூலாசிரியர் இயற்றியுள்ள களவுப் படலமும் அந்தச் சங்கர சங்கிதையிலே கிடத்தல் வேண்டுமே? களவுப் படலம் ஆண்டுக் கிடக்குமேல் தமிழ் மொழிக்கே சிறந்துரிமையுடைய பொருளிலக்கணமும் சங்கரசங்கிதையிற் கிடந்தன எனல் வேண்டும். பின்னரும் இந்நூலாசிரியர் மறைஞானசம்பந்த நாயனார் அருளிச்செய்த சிவதருமோத்தரம் என்னும் நூலின் பொருள் முழுவதையும் அகத்தியனருள்பெறு படலத்தின்கண் எல்லோரும் எளிதிலுணரும் பொருட்டுப் பொதிந்து வைத்தனரல்லரோ! அந்தச் சிவதருமோத்தரமும் அச் சங்கர சங்கிதையிற் கிடந்ததே யாதல் வேண்டும். பொருளிலக்கணம் எட்டுணையும் அறியாத வடவர் கந்த புராணத்துள் ஒரு மூலையிலே நந்தம் அருமைப் பொருளிலக்கணங்கள் முழுதும் அடங்கிக்கிடந்தன வென்னல் நகைப்பிற்கே இடனாமன்றோ! இவற்றையெல்லாம் கூர்ந்துணராது இந்நூலை மொழிபெயர்ப்பு நூலென்பது விந்தையினும் விந்தையேயாம்.
இனி, இந்நூலாசிரியர் வடநூலார் புராணம் கூறும் மரபு பற்றியே இத்தணிகைப் புராணத்திற்கும் வரலாறு கூறியுள்ளார். வடவர் புராணங்கூறு மரபாவது : என்றாவது ஒருநாள் சூத முனிவன் நைமிசாரண்யத்துக்கு எழுந்தருளுவன். அங்கு வாழ்கின்ற இருடிகள் அம்முனிவன் அடிவணங்கித் தமக்கு யாதானும் ஒரு புராணத்தை ஓதியருள்க! என்று வேண்டுவர். அம்முனிவனும்