Primary tabs
அவர் வேண்டுகோட்கிணங்கி அவர் விரும்பிய புராணத்தைக் கூறத் தொடங்குவான். இம்முறை வடநூலார் புராணத்தைத் தோற்றுவாய் செய்தற்கு மேற்கொண்டுள்ளதொரு நூனெறி வழக்கமேயன்றி வாய்மையாகாது. கச்சியப்ப முனிவரும் அந்த மரபுபற்றியே இத்தணிகைப் புராணத்தையும் தோற்றுவாய் செய்துகொண்டு தாம் ஓதியுணர்ந்த செந்தமிழ் நாட்டுச் சைவ சித்தாந்தத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களாகிய சங்க நூல்களிற்றாம் பயின்று இன்புற்ற பழந்தமிழர் பண்பாடாகிய அகப்புற வாழ்க்கை நெறிகளையுமே இப்பேரிலக்கியத்தின் உள்ளீடாக அமைத்திருத்தலை இதனைப் பயில்வோர் நன்குணர்தல் கூடும். ஆசிரியர் பரஞ்சோதி முனிவரும் இவ்வடவர் மரபு பற்றியே திருவிளையாடற் புராணத்தைக் கூறுவர். மதுரையினிகழ்ந்த இறைவன் திருவிளையாடல்கள் சங்கரசங்கிதையிலிருந்தே தாம் கூறுவதாக அம்முனிவர் கூறுவதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.
இனி, இத்தணிகைப் புராணத்தின் அமைப்பு முறையினைக் கூர்ந்து ஆராயின், இப்புலவர் பெருமான் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருக்குறள் செய்திருக்கின்ற முறையினையே மேற் கொண்டுள்ளனர் என்பது தெரியவரும். என்னை? ஆசிரியர் திருவள்ளுவனார் பாயிரவியல் என்னும் புறவுறுப்போடு அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் எனத் தமது தெய்வநூலை முப்பாற்படுத்தமைத்தபடியே இவரும் இத்தணிகைப் புராணத்தைக் கடவுள் வாழ்த்துத் தொடங்கி நந்தியுபதேசப் படலம் ஈறாக வுள்ள படலங்களைத் திருக்குறளிற் கடவுள் வாழ்த்து முதலாக அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரம் ஈறாகவுள்ள பாயிரவியல் போன்றும், அகத்தியன் அருள்பெறு படலத்தில் இல்லறவியலும் துறவறவியலும் காட்டி அறத்துப்பால் போன்றும், அடுத்து வருகின்ற சீபரிபூரணநாமப்படலந் தொடங்கி இராமனருள்பெறு படலம் முடியப் போர்ச்செயலும் பொருள் வருவாயுங் காட்டிப் பொருட்பாலாகவும் பின்னர்க் களவுப்படலந் தொடங்கி நூன்முடியுந் துணையும் களவும் கற்புங் காட்டிக் காமத்துப்பால் போன்றும் அமைத்திருத்தலான் என்க.
மக்கள் வாழ்க்கையும் கடவுளுணர்ச்சியும்
இனி, உலகில் உடம்பெடுத்து வாழ்கின்ற பிறப்பு வகைக்கு ஓர் எல்லை காண்பரிது; ஆயினும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உயிரினங்களைத் தம் கூர்த்த மதியா லாராய்ந்து அவைகள் அறிவு வகையால் ஆறு வகைப்படும் என்று அறுதியிட்டுள்ளனர். அவை புல் மர முதலிய ஓரறிவுடையன முதலாக மக்களாகிய