Primary tabs
ஆறறிவுடையன ஈறாக ஆறுவகைப்படுவனவாம். இவற்றுள் ஒன்றறி வுயிர்முதல் ஐயறிவுடையன ஈறாகவுள்ள எல்லா வுயிரினங்களையும் 'அஃறிணை' என்னும் ஒரு கூற்றினுளடக்கி ஆறறிவுயிராகிய மக்கட் பிறப்பு ஒன்றுமே சிறப்புடைய பிறப்பென்று கருதி அதனை 'உயர்திணை' என ஒரு கூறாக்கிக் கூறியிருக்கின்ற நுணுக்கம் பெரிதும் வியக்கத்தகுந்த தொன்றாகும். வியத்தகு பிறப்பாகிய இம்மக்கட் பிறப்பினை உயர்திணை என்றதற்குக் காரணம் மக்கள் நெஞ்சத்தில் 'கடவுள்' என்னும் பொருளைப்பற்றிய உணர்ச்சி யொன்று குடிகொண்டிருப்பதேயாகும். இக்கடவுளுணர்ச்சியை மட்டும் விலக்கிவிட்டு, மக்கள் வாழ்க்கையை நோக்கின் அவர்களும் விலங்குகளுள் வைத்து வியத்தகு மொருவகை விலங்கே ஆகிவிடுதல் தேற்றம். மற்று மக்கள் உள்ளத்தே முகிழ்க்கின்ற அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உணர்ச்சிகளும் அந்தக் கடவுளுணர்ச்சியின் காரியங்களேயாம். கடவுளுணர்ச்சி அகற்றப்படின் இவ்வுணர்ச்சிகள் பொருளற்ற மூடப்பழக்கங்களாகவே எஞ்சி நிற்கும்.
ஏனைய எந்தப் பிறப்பினும் காணப்படாமல் மனிதன் உள்ளத்தில் மட்டும் இக்கடவுளுணர்ச்சியும் அதனைச் சார்ந்த அறமுதலிய வுணர்ச்சிகளும் அரும்பியிருப்பதற்கு ஒரு காரணமும் இருத்தல் வேண்டும். மனிதனுடைய அறியாமையே அவ்வுணர்ச்சிகளுக்குக் காரணம் என்று எளிதாகவே விடையிறுப்போரும் மக்களுட் சிலர் உளராயினும் மக்களிற் றாழ்ந்துள்ள அஃறிணையுயிர்களே அறியாமையில் மிக்கவை ஆதலால் அறியாமையே கடவுள் உணர்ச்சிக்குக் காரணமாயின் அஃறிணையுயிர்களிடத்தேதான் அவ்வுணர்ச்சி மிக்கிருத்தல் வேண்டும். ஆதலால் இக்கூற்றுத் தருக்க முறையோடு பொருந்துவதன்று. மக்களாய்ப் பிறந்திருந்தும் கடவுள் இல்லை என்பதற்குக் காரணம் அவர்தம் அறியாமை என்பதே சான்றோர் கொள்கையாகும். இக்கொள்கை தருக்க முறைக்கும் பொருந்திய கொள்கை என்க.
இனிச் சிறப்பாக இக்கடவுள் உணர்ச்சியை இயற்கையிலேயே உடைய மக்கள் அவ்வுணர்ச்சியற்ற அஃறிணை யுயிர்கள்போன்று இந்நிலவுலகத்தில் கவலையின்றி அமைந்து வாழ்தற்கு அவ்வுணர்ச்சி இடங்கொடுப்பதில்லை. விலங்குகள் இவ்வுலகில் உடலால் மட்டும் வாழ்வன. ஆதலால் உடம்பிற்கின்றியமையாத உணவுக்கும் இணைவிழைச்சிற்குமே அவைகள் அலைகின்றனவாயினும் அவற்றைப் பெற்றபொழுது முழு நிறைவுடன் நன்கு உறங்குகின்றன. மக்கட்கும் உடலுண்டு ஆதலால் அவர்க்கும் அவ்விரண்டும் இன்றியமையாதனவேயாயினும், மக்கள் அவற்றை நிரம்பப் பெற்றபொழுதும் அமைதி கொள்வதில்லை. ஏன்?