தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thanikai Puranam

தத்துவ நூல்கள் கூறுவது முற்றும் வாய்மையேயாயினும் ஆறாவது அறிவுலகத்தை அவனருளாலே எய்திய வுயிர்கள் தமக்குத் தோன்றாத் துணையாயிருக்கின்ற அம்முதல்வன் தமக்குச் செய்யுமுதவிக்குத் தகுந்த கைம்மாறு செய்வனபோலத் தமக்கு அம்முதல்வன் செய்தாற்போன்றே சுத்தமாயையினின்றும் அம் முழுமுதல்வனுக்கும் உடம்பும் உட்கருவிகளும் உலகங்களும் நுகர்ச்சிப் பொருளும் தமது மெய்யுணர்வினாலே படைத்து வழங்குகின்றன. இவ்வாற்றால் உயிர்கள் அந்த இறைவன் மக்களே தாம் என்னும் தமது சிறப்பினை மெய்ப்பித்து வைக்கின்றன. அசுத்தமாயையினூடு அவ்விறைவனருளாலே யாத்திரை செய்கின்ற உயிரினம் ஆறறிவுயிர் என்னும் மக்கட் பிறப்புற்று அப்பிறப்பினும் நெடுந்தொலை வந்த அந்தயாத்திரையின் பயனாகப் பெற்ற மெய்யுணர்வினாலே படைத்துக் கொடுத்த சுத்தமாயையா லியன்ற அந்த விண்ணுலகிலே அஃதாவது புராணங்களிலே அந்த இறைவன்றானும் அம் மக்கள் படைத்துக் கொடுத்த அழகிய தெய்வ உடம்புகளிலே ஆர்வத்துடன் இறங்கி அவ்வன்பருடைய மெய்யுணர்வுக் கண்ணுக்குப் புலனாகி அவரை ஆட்கொள்ளுகின்றனன். ஈண்டு யாம் கூறியாங்குச் சுத்தமாயையினின்று தோன்றியவிண்ணுலகமே கடவுட் புராணங்கள் என்றுணர்க.

நில முதலிய ஐம்பெரும் பூதங்களின் கூட்டமே நாம் வாழ்தற்கியன்ற உலகம் என்பது யாவரும் அறிந்த வுண்மையாகும். இங்ஙனமே சுத்தமாயையினின்றும் பிறந்த சொற்களாலியன்ற புராண வுலகத்திலேதான் இறைவன் அருளுருவம் கொண்டு எழுந்தருளி வந்து அவர்களோடு அளவளாவி அவர்க்குக் காட்சி தருகின்றனன். ஆதலால் புராணங்களே விண்ணுலகம் என்றறிதல் வேண்டும். ஒலி சுத்தமாயை என்பர் தத்துவ நூலோர். ஒலியாலியன்றதே சொல்; அச் சொற்களாலியன்றதே புராணம். ஒலி விண்ணின் குணமன்றோ? ஆதலினாற்றான் புராணங்கள் விண்ணுலகம் எனப்பட்டன. இறைவன் உயிர்கட்கு மண்ணுலகைப் படைத்துக் கொடுத்தான். உயிர்கள் அவன் வாழ விண்ணுலகைப் படைத்து அவ்விறைவனும் மனைவி மக்களோடு, வாழவைத்தன. கடவுள் உயிர்களின் மொழியாற் பேசப்படாததும் மனத்தால் நினைக்கப் படாததுமாகும் என்று தத்துவ நூல்கள் பேசுகின்றன. மற்றுப் புராணங்களோ இறைவன் நுமக்கு மிகவும் அணுக்கமானவன் ஆரூரிலிருக்கின்றான், தில்லையில் கூத்தாடுகின்றான், தணிகையிலே ஆறுமுகத்தோடு எழுந்தருளி யிருக்கின்றான் என்று இனிதினியம்பி அவன் திருமுன்னர் அழைத்தேகுகின்றன. மேலும்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:56:19(இந்திய நேரம்)