Primary tabs
என்று தேற்றமாக அறிவிக்கின்றன. தத்துவ நூலோர் எஞ்ஞான்றும் உயிர்களால் காணப்படாதவன் என்று அறுதியிட்டுக் கூறிய அந்தக் கடவுளே ஈண்டுத் தன்பால் அன்புடையார் நெஞ்சில் ஒருகால் முருகா என்றோதுமளவிலே தனதிரண்டு திருவடிகளையும் தோற்றுவிக்கின்றான். தத்துவ நூலறிவுடையோர் தம்மறிவின் ஆற்றலாலே இறைவனைத் தேடித் தேடி அவனைக் காணாது கையற்றுப் போய் ஆண்டவன் ஒருவன் உளன் என்று யாம் எம்முடைய கருதலளவையாற் காண்கின்றோம். ஆனால் அவ்விறைவனை யாம் எப்பொழுதும் காணமாட்டேம்; கண்டதுமில்லை என்று கூறினர். அவர் காணவுமியலாது. மற்றுப் புராணங்களோ அறிவியல் நூல்களல்ல, அன்பு நூல்களாகும். இறைவன் உளனோ இலனோ என்னும் ஐயப்பேய் அறிவுடையாரையே பற்றி அலைக்கவல்லது. புராணத்தைப் போற்றும் இவ்வன்பர்பா லணுக மாட்டாது. ஆகவே ஒருதலையாகத் தன்பா லன்பு வைத்துள்ள மெய்யடியாராகிய இந்த ஏழைகளுக்கு அந்த இறைவனும் ஏழையேயாகி அவரவர் நினைத்த வடிவத்தோடு அவர் நினைக்கு முன்பே இதோ வந்துவிட்டேன் என்று அவர் முன்பு வந்து நிற்கின்றான். புராணங்கள் இத்தகைய அன்பர்களையும் அவர்பால் அவர் கருது முருவத்தோடும் விரைந்து ஓடிவருகின்ற அந்தக் கடவுளர்களையுமே நமக்கு அறிமுகம் செய்துவைக்கின்றன. இறைவன் இந்தப் புராணங்கள் கூறுமாறு உருவங்கொள்ள வியலாது என்று நம்மால் மறுக்கவும் ஒண்ணாது. என்னை? அவன்றான்,
(சி. சித்தி, சுப. 164)
ஆகலான் என்க.
இனி, அறிவியல் நூலாகிய தத்துவ நூலிற் கூறப்படும் மெய்யறிவோடு அன்பியல் நூலாகிய இந்தப் புராணங்களில் யாம் காணுகின்ற மெய்யன்பருடைய அன்புக்கு நிகரான மெய்யன்பும் ஆகிய இருபெரு நலங்களும் ஒருசேரப் பெறுகின்ற திருவுடையோரே முழுமையுற்ற மெய்க்காட்சியாளர் ஆவர் என்பதில் ஐயமில்லை. இவ்விரண்டில் அன்பு கலவாது அறிவுமட்டுமே பெருகப் பெற்றவர் ஆண்டவன் திருவருட்கு ஆளாதல் அரிதேயாம்.