Primary tabs
அவர்தம் கூர்த்த அறிவே ஆண்டவன்றிருவருளை உணர்தற்குப் பெருந்தடையாகவும் அமைந்துவிடுகின்றது. மற்று அறிவுபெருகாமல் அன்புமட்டுமே பெருகியிருப்போருமுளர்; இவர் ஆண்டவன் திருவருட்கு மிகமிக எளிதாகவே ஆளாகிவிடுகின்றனர். எனினும் இவர் பெறுகின்ற பேறே முற்ற முடிந்த பேறாதல் இல்லை. மெய்யுணர்வும் மெய்யன்பும் சமநிலையில் முதிர்ந்தோரே என்றும் அழியாத பேரின்ப வீட்டிற் புகுதற்குரிய ராவார். ஆகவே அறிவும் அன்பும் மெய்க்காட்சியாளர்க்கு ஒரு பொருளையே முழுதுறக் காண்கின்ற இரண்டு கண்களே யாகும் என்னலாம். இதனால், இத் தணிகைப் புராணத்தில் ஆசிரியர் கச்சியப்ப முனிவர் அன்பர் வரலாற்றாலே மெய்யன்பின் திறத்தினையும் சைவசித்தாந்தத் தாலே மெய்யறிவின் திறத்தினையும் மிகமிக நுண்மையாக விளக்கியிருக்கின்றார். இவ்வாற்றால் புராணங்களுள் வைத்து இத் தணிகைப் புராணத்திற்கு ஒப்பாகப் பிறிதொரு புராணமும் இல்லை என்று துணிந்து கூறலாம்.
இனி, இந்த நூலாசிரியர் இப்புராணத்தைத் தணிகைப் புராணம் என்னும் பெயரால் பல்வேறு திருமூதூர்களில் வைத்துத் திருத்தணிகை ஒன்றற்கே சிறந்துரிமையுடையதுபோல இயற்றினாரேனும், இந்தப் புராணம் மெய்யுணரும் வேட்கையுடையாரனைவர்க்கும் பொதுவாகத் திகழ்கின்ற அறிவுக் களஞ்சியமாகவே இருக்கின்றது. கச்சியப்ப முனிவர் போன்று மெய்யுணர்வு பெறாதவரும் புலமைத்திறம் வாய்க்கப் பெறாதவரும் இயற்றிய கோயிற் புராணங்கள் மலிந்து கிடக்கின்ற காரணத்தால் புராணம் என்ற பெயரே இக்காலத்திற்றன் சிறப்பிழந்து நிற்கின்றது. ஆசிரியர் காலத்தே புராணங்கள் நன்கு மதிக்கப்பட்டிருந்தன போலும். ஆதலால் இதற்கும் அவர் அப் பெயரையே சூட்டியுள்ளார். நூல்களின் பெயரிலும் ஒரு கவர்ச்சித்திறனுண்டு. இக்கவர்ச்சித்திறனுடையனவாகப் பெயர் இருத்தலைக் கருதியே அகநானூற்றை முக்கூறு படுத்திய பழைய புலமையாளர், அவற்றிற்கு நித்திலக்கோவை என்றும் மணிமிடை பவளம் என்றும் களிற்றியானை நிரை யென்றும் பெயர் சூட்டினர். இப் பெயர்க்குக் காரணம் அந் நூல்களிற் காணக்கிடையாது. ஆயினும் இப் பெயர்களோ நம் நெஞ்சத்தை எத்துணைக் கவர்கின்றன காண்மின். சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காப்பியங்களும் தம் பெயரானும் பெரிதும் கவர்ச்சியுடையன. இவற்றையே சீவக புராணம், கண்ணகி புராணம் எனக் கூறிக் காண்மின்; இவை நூலின் கவர்ச்சியையும் குறைப்பன வாதல் புலப்படும். யாதேனும் கவர்ச்சியுடைய ஒரு பெயரை இத் தணிகைப் புராணத்திற்கு இப் புலவர் பெருமான் சூட்டி யிருத்தலாகாதோ என்று யாம் இப்பொழுது குறைப்பட்டுக் கொள்வதாற்
பயனென்னை?