Primary tabs
கடவுட்டன்மை யுடையராக இவ்வுலகம் என்றென்றும் போற்றி வருகின்றது.
இனி, இத்தகைய இயற்கைப் புலவருள் ஒருசிலர் கல்வியறிவு நிரம்பப் பெறாதாரும் உளர். மற்று இவர்களே இவ்வியற்கை யுணர்வுவன்மையோடு நூலறிவும் நிரம்பப்பெற்றவராய்விடின் உலகம் போற்றும் மாபெரும் புலவர்களாகிவிடுகின்றனர். இத்தகைய நலனெலாம் ஒருசேர ஒருவர்க்கு அமைதல் அரிதாம். இக் காரணத்தால் இத்தகைய புலவர் ஒருசில நூற்றாண்டுகட் கிடையே ஒருசிலரே தோன்றுகின்றனர்.
இனி, கல்வியறிவானிரம்பப்பெற்ற சான்றோர் பெரும்பாலும் எந்தக் காலத்திலும் உளராவார். செய்யுளியற்றுதற்கு வேண்டிய இலக்கிய இலக்கணப் பயிற்சியால் எத்துணை நிரம்பினும் இன்பங் கெழுமிய செய்யுள் ஒன்றனையேனும் இயற்றும் ஆற்றல் இத்தகை யோர்க்கிருப்பதில்லை. வாய்மையே நோக்கின் அருணிரம்பிய பேரிசைப் புலவன் ஒருவனியற்றிய செய்யுளின்பத்தை நுகரத் தானும் தெரியாதார் இவருட் பலரைக் காணலாம். கலைமகளின் அருட்கு அணுக்கனாய் இன்பம்கெழுமப் பாடிய புலவன் செய்யுளை நுகர்தற்கும் அக்கலைமகளின் கடைக்கண்ணருள் ஒருசிறிதேனும் வேண்டும். இவ்வருள் பெற்றோர் கல்லாது வைத்தும் செஞ்சொற் கவியைக் கேட்புழி, இன்பத்தால் கண்ணீரரும்பி மெய்சிலிர்த்துத் தம்மையும் மறந்து போகின்றனர். இத்தகையோரைச் சிறந்த சொற்பொழிவாளன் பேசும் அரங்கிலே சிற்சில செவ்வியிற் காண்டல் கூடும். இங்ஙனமிருந்தவாற்றாலன்றோ ஒரு புலவன், "ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார்" என்று அறுதியிட்டுரைத்தனன், நந்தம் குமரகுருபரவடிகளார் தாமும்,
(நீதிநெறி விளக்கம் 5)
என்று ஓதியிருத்தலும் உணர்க.
இனி, இத்தணிகைப் புராணத்தை இயற்றியருளிய கச்சியப்ப முனிவர், காப்பியஞ் செய்யுந்திறத்திலே - இயற்கை அழகுணர்ச்சியிலே - நம் நாட்டிற்றோன்றிய கம்பநாடருக்கு அடுத்து நிறுத்தி நினைக்கத்தக்கவராவார் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து. இனிக் கல்வியறிவின் பெருக்கத்திலே ஒரோவழி இக் கச்சியப்ப முனிவர் அக் கம்பநாடர்க்கும் முன்னிற்குந் தகுதியுடையோர் என்று கருதவும் என்னுள்ளம் இடந்தருகின்றது.