தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thanikai Puranam

தொலைவு அந்த மணலை வாய்க்கால்களாக அகழ்ந்து கொடு போய்த் தம்மூர்ப் பாய்ச்சல் மதகுகளின் வாயிலே சேர்த்துவிடுவர். அந்த வாய்க்காலினூடே ஊறுகின்ற நன்னீர் பெருக்கெடுத்து அம் மதகுகள் நிரம்பப் பாய்ந்து கழனிகளை நிரப்புகின்றன. இந்த வியத்தகு நிகழ்ச்சியை யாமும் பாலியாற்றிலே கண்கூடாகக் கண்டு வியந்துள்ளேம். "இல்லான் கொடையே கொடை!" பெருநிதிக் கிழவர் கொடைக்கு அத்துணைச் சிறப்பில்லையல்லவா! அத்தகையோர் கொடை பெரும்பாலும் வீணான ஆரவார நீர்மையுடையனவும், குறியெதிர்ப்பை நீரவுமாதலு மியற்கை. ஈண்டுக் கச்சியப்ப முனிவர் காவிரி முதலிய ஏனைய யாறுகள் ஒழுகுகின்ற நாட்டை யெல்லாம் வீண்முறை நாடு என்று பழிக்கின்றார். இவ்வாறு அவர் கூறியபோது அவர் திருவாயில் ஒரு புன்சிரிப்புத் தவழ்ந்திருத்தல் வேண்டும். அத்துணை இனிமையானதும் ஆழ்ந்ததுமான நகைச்சுவையை அந்த 'வீண்முறை" என்னும் இகழ்ச்சிச் சொல் தன்னுட் கொண்டுள்ளது. என்னை? காவிரி போன்ற அந்தப் பேரியாறுகள் எத்துணைமுறை கட்டுக் கடங்காமல் பெருகிக் கரைகடந்து தம்மை நம்பி வாழுமக்களைத் துன்பத்தில் மிதக்கவிடுகின்றன. அதுவேயுமன்றி எத்துணை யளவு நீரை மக்கட்குப் பயன்படாதபடி வீணாகவே கொண்டு போய்க் கடலிற் கவிழ்த்துவிடுகின்றன. இச் செயல் செல்வர்க்கு விருந்துணவு வழங்குவது போன்றதொரு வீண்செயலே என்பதில் ஐயமில்லை. குடிமக்கள் பெரும்பாடுபட்டு மண்ணகழ்ந்து கோலிய வயல் வரம்புகளையும் குளக்கரைகளையும் ஒரே நாளிலே தரைமட்டமாக்கிவிடுகின்றன. வீண்முறை என்பதனால் இத்துணையும் உய்த்துணர்ந்து மகிழவே அப்புலவர் பெருமான் அச் சொல்லைத் திறம்பட அமைத்துள்ளார். இனி, அவர்தம் தொண்டை நாட்டு நதிகள் குல நதிகளாம். அந் நாட்டுமக்கள்தாம் உயர்ந்த குலத்திற்றோன்றிய சான்றோர் என்று முன்னர்க் கண்டோம். நதிகள்கூட உயர்ந்த குலமுடையனவாம்!

என்னே பெருமை! அவர்தம் நாட்டு நதிகள் குலமகளிர் போன்று அடங்கி நடப்பதன்றிப் பிறநாட்டு நதிகள்போன்று ஒருபொழுதும் கரைகடந்து ஒழுகா; பிறரை வருத்தா; எனவே குலநதிகள் ஆயின. ஈண்டு முனிவர் தாள்முறை தப்பாவண்ணம் என்றது, தம் குடிமக்களுடைய தாளாண்மை தவறிவிடாதவாறு வேண்டுங்கால் வேண்டுமளவு நீரை வழங்கும் என்றவாறு. தாளாண்மை - வேளாண்மை; உழவுத் தொழில். இன்னும் ஊண் முறைப்புனல் வந்தோடும் என்பதோ காவிரி முதலிய யாற்று நீர்கள் பெரும்பாலும் செம்புலப் பெய்நீராய்க் கலங்கல் நீராகவே காணப்படும், பருகுவதற்குதவமாட்டா என எதிர்மறை வாயிலாகவும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:27:40(இந்திய நேரம்)