தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thanikai Puranam

அந்த வீண்முறை நதிகளைப் பழிக்கின்றது. ஊற்றுப் பெருக்காலுலகூட்டும் இத்தொண்டை நாட்டு நதிகளின் நீரோ எப்பொழுதும் மிகமிகத் தெளிந்த தூய நீராகவே இருக்குமாம். தூய நீரையே எப்பொழுதும் பருகிவாழும் மாந்தர் தூய சான்றோராதலும் இயற்கையன்றோ? இந்தப் பெருமை எங்கள் நதிகளுக்கே உண்டென்பதற்கே ஊண்முறைப் புனல் வந்தோடும் நதி என்கின்றார். இவ்வாறே இவர்தம் செய்யுள்களும் இவர் நாட்டு நதிகள்போன்று அகழுந்தொறும் அகழுந்தொறும் புதுப்புதுப் பொருள் சுரந்தளிக்குஞ் சிறப்புடையனவாம். ஈண்டுக் கச்சியப்ப முனிவர் கூறிய இச் செய்யுளினூடே சேக்கிழாரடிகளாரும் கரந்துறைகின்றார்; அதனை ஆராய்ந்து கண்டுகொள்க.

இனி ஆசிரியர் கச்சியப்ப முனிவர் திருவள்ளுவர் கருத்துக்களையும் சொற்களையும் கையாளுவதில் ஏனைய எந்தப் புலவர்களினும் விஞ்சியிருக்கின்றார். திருக்குறள்களை மட்டுமோ? அக் குறள்களுக்கு உரைவகுத்த நுண்மாணுழைபுலனுடைய பரிமேலழகர் உரையின் அருமையுணர்ந்து இன்றியமையாத இடங்களிலே அந்த உரையாகிய மணிகளையும் தமது செய்யுளாகிய பொற்பேழையிலே பொதிந்து வைத்துள்ளார். இங்ஙனமே இவர் தொல்காப்பிய உரையாசிரியர் சொற்களையும் எடுத்துத் தமது செய்யுளிலே அழகுற அமைத்துள்ளனர். அவற்றையெல்லாம் விரிவஞ்சி ஈண்டு எடுத்துக் காட்டுகின்றிலேம். ஆயினும் திருக்குறளை இவர் எடுத்தாளுகின்ற முறையை அறிந்து கோடற் பொருட்டுக் கீழே தருகின்ற செய்யுள்களை ஓதி அவற்றைத் திருக்குறளினும் இந்நூல் உரையினும் ஆராய்ந்துணர்ந்து கொள்க.

"வருபுனல் வாய்ந்த வோங்கல் வல்லர ணிருநீ ரென்னும்
 பொருவில்பல் லுறுப்பிற் றாகிப் பொங்கிய செல்வ மேமம்
 வெருள்பிணி யின்மை யின்பம் விளைவுநன் கணிந்து தாழ்வில்
 திருவினர் தக்கோர் சாலச் செறிந்தது தொண்டை நாடு"

(திருநாட் - 4)


"மலிபெரும் பொருளாற் பெட்கும் வன்மையு நாடா தியாதும்
 மெலிவுக வுதவும் வாய்ப்பும் மெலிகலார் மெலிந்த காலும்
 நலிதரா வளனு மெல்லா நலிவுநீத் தாற்ற வீண்டும்
 ஒலிகெழு விளையு ளோடுமுடையது தொண்டை நாடு"

(மேற்படி - 5)


"பல்குழு வேந்தலைக்கும் படர்கொலைக் குறும்பு தீய
 பல்குமுட் பகையு டற்றும் பகையுறு பசிதீ ராநோய்
 புல்குறி தானு மின்றிப் பொறையொருங் குறுகாற் றாங்கி
 நல்கிறை வேந்தர்க் குய்க்கு நலத்தது தொண்டை நாடு"

மேற்படி- 6)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:31:02(இந்திய நேரம்)