Primary tabs
(திருநகரம் : 1)
யாரேனும் ஒருவரை உயர்த்தக் கருதிய பொழுதெல்லாம் முருகனையே உவமையாக எடுப்பர்; ஏன் ? அவனின் மிக்க ஆடவர் இவ்வுலகிலும் தேவருலகிலும் இல்லை அன்றோ! அதனாலேதான், அம் முருகன் ஒருவனையே உவமையாக்குகின்றார். உயர்வற வுயர்ந்த அந்தச் சிறப்பு அவனுக்கிருப்பது போலவே அவன் எழுந்தருளியிருக்கும் இத் தணிகை நகரத்திற்கும் உண்டு கண்டீர்! அதனாலேதான் இந் நகரத்திற்கு உவமை கூறி உங்கட்கு விளக்க என்னாலியலாதென்கின்றேன்.
(மேற்படி)
என்பது கச்சியப்பர் பொன்மொழியாகும்.
இவ்வாறு தோற்றுவாய் செய்துகொண்டு முனிவர் தனக்குவமை யில்லாததொரு நகரத்தை இப் படலத்திலே நமக்குக் கண்கூடாகத் தோன்றுமாறு படைத்தளிக்கின்றார்.
நன்மை யொன்றிருந்தால் அங்குத் தீமையும் உடனிருப்பதே இவ்வுலகியற்கை. இவர் நகரக் காட்சியைப் பெருமிதம்படப் பேசி வரும் பொழுதே அந்தத் தணிகை நகரத்துப் பரத்தையர் சேரிக்கும் நம்மை அழைத்துப் போகின்றார். இவ்விடத்தேயும் நமக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றார். அஃதாவது :
"இளமை கெழுமிய நண்பரீர் ! இச்சேரியிலே வாழும் பரத்தை மகளிரைக் கூர்ந்து நோக்காமல் வம்மின் ! அம்மம்ம ! நும்போல்வார் சில இளைஞர் தம்மையே பெரிதும் விரும்பும் மெய்க்காதலுடைய தம் மனைவிமார் வீட்டிற் கிடந்தழும்படிவிட்டு இந்தப் பரத்தையர் சேரியிற் புகுகின்றனர். இப் பரத்தையர் அந்தக் காளையர் ஈட்டிய பொருள் முழுவதையும் கவர்ந்து கொண்டு பாவம் ! அவருயிரையும் கவர்ந்து கொள்வர் ! அத்தகைய கொடியோர் இவர். இவரை நல்லார் என்பது கொடிய நச்சுப்பாம்பினை நல்லபாம்பு என்பதனையே ஒக்கும். இப் பரத்தையர்க்கு இவருகின்ற நும்மனம் இவர் பாலுறின் உய்கலீர்" என்று அறிவுறுத்துகின்றார். முனிவரர் ஈண்டு நம்மனோர்க்குப் பரத்தையர் சேரி காட்டுவார் போன்று பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கத்தை ஒழிமின் என்று அறங்கூறுமொரு சூழ்ச்சி இது. மேலும் அவர்,