Primary tabs
என உவமையாக எடுத்தோதுதலும், கழனிகளிற் செழித்த செந் நெற் பயிர் கதிரீன்று அது முதிருங்காறும் எரு நீர் முதலியன வேண்டி நின்று கதிர் நன்கு முற்றிய பின்னர் அக் கழனியினின்றும் எரு நீர் முதலியன வேண்டாது நிற்றலை.
"உடல் கருவி புவனம் உறுபோகம் எல்லாம் உடங்கியைந்துஞ் சிவன் தோற்றம் ஒன்றே காணும் மடனகன்ற சீரடியார் நுகர்ச்சி யாதும் மருவாமை ஒழிந்து நிற்கும் வாய்மையை" உவமை கூறி விளக்குதலும், ஆகிய இன்னோரன்ன கருத்துப் பொருளைக் காட்சிப் பொருட் குவமை காட்டி வெளிப்படையாக உவமையாற் பொருள் விளக்குவார் போன்று ஓதுவாருள்ளத்தே தம் குறிக்கோளாகிய தத்துவ வுணர்ச்சியையே பெரிதும் வளர்த்து விடுகின்ற செயற்கரிய செயலை இத் தணிகைப் புராணத்திற் பன்னூறிடங்களிலும் காணலாம். இவ்வாறு செய்யுள் செய்வதில் இப் புலவர் பெருமானுக்கு இவரே நிகராவர். இஃது இவர்க்கே யுரிய தனிப்பெருஞ் சிறப்பென்பேம்.
யாண்டும் இத் தணிகைப் புராணத்தின்கண் தலைசிறந்து திகழ்வது அன்புச் சுவையே யாகும். நகை முதலிய எண் வகைச் சுவைகளும் ஆங்காங்கு நன்கு புலப்பட்டுக் கற்போர்க்குக் கழிபேருவகை தருகின்றன.
இனி, அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் உறுதிப் பொருள் என்று கொள்வர் தமிழ் நூலோர். வீடு மனத்தான் நினையவும் மொழியாற் கூறவும் மாந்தர்க்கியல்வதன்று. ஆகவே அறங் கூறவே அதன் பயனாகிய வீடும் கூறப்பட்டதேயாம். இத் தணிகைப் புராண ஆசிரியர் இந் நூலின்கண் (1) நாட்டுப் படலம் முதலாக (8) அகத்தியப் படலம் ஈறாக வமைந்த படலம் எட்டனுள்ளும் இல்லறம் துறவறம் என்னும் இருவகைப்பட்ட அறத்தின் மாண்பினையே ஓதுகின்றமையும், அதன்பின், சீபரிபூரண நாமப் படலம் முதலாக, (14) இராமனருள் பெறு படலம் ஈறாக வமைந்த ஏழு படலங்களில் பொருளின் சிறப்பை ஓதியிருத்தலையும் அவற்றின் பின்னர் (15) களவுப் படலம் முதலாக (18) நாரதனருள் பெறு படலம் முடிய அமைந்த நான்கு படலங்களில் இன்பச் சிறப்பினை ஓதியிருத்தலையும் கூர்ந்து நோக்குவார் கச்சியப்ப முனிவர் இந் நூலை அறம் பொருள் இன்பம் என்னும் பழைய தமிழ் மரபினை மேற்கொண்டு முறை செய்தமைத்துளார் என்று ஊகிக்கலாம்.
ஈண்டுக் கூறியவாற்றால் இந்நூல் நூலின் பயனாகிய அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயப்ப ஏனைய வுறுப்புக்களையும் தாங்கிச் சிறந்ததொரு செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகவே விளங்குகின்றது.