தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

(1) நாட்டுப் படலம் (2) நகரப் படலம்

இந் நூலிலமைந்த படலங்களுள் வைத்து நாட்டுப் படலமும் நகரப் படலமும் இப் பெருங்காப்பியத் தலைவனாகிய முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கின்ற தொண்டை நாட்டின் வளத்தையும் தலைவன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்ற தலைநகரமாகிய தணிகைமா நகரத்தின் பெருமையையும் திறம்பட விரித்து விளம்புகின்றன. இந்த இரு படலங்களிலும் முனிவருடைய கற்பனைத் திறம் பெரிதும் சிறப்புற்றுத் திகழ்கின்றது.

(3) புராண வரலாற்றுப் படலம்

இனி, மூன்றாவது புராண வரலாற்றுப் படலத்தில் இத்தணிகைப் புராணம் வந்த வரலாற்றினைக் கூறுமாற்றால் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற வெள்ளிமலை முதலாகத் திருவல்லம் ஈறாக அறுபத்து நான்கு திருவூர்களும் செவ்வேள் எழுந்தருளிய பவானி முதலாகத் திருத்தணிகை ஈறாக அறுபத்து நான்கு திருவூர்களும் கூறப்பட்டிருக்கின்றன. இதன்கண் கூறப்பட்டுள்ள சிவன் றிருவூரும் செவ்வேள் திருவூரும் என இரு கூற்று ஒரு நூற் றிருபத்தெட்டுத் திருவூர்களுள்ளும் மிகமிகச் சிறந்த திருவூர் இத் தணிகையே என்று தோற்றுவாய்செய்து கொண்டு ஆசிரியர் கச்சியப்ப முனிவர் 'சீபரிபூரணகிரி' என்று இத் தணிகைக்கு ஒரு பெயர் உளதென்று அப் பெயர்க்குரிய காரணங்களையும் இனிதினெடுத் தியம்புவர். இவ்வாறே தணிகைக் கெய்திய திருப்பெயர் பத்துள என்றும் அவற்றையும் அவற்றிற்குரிய காரணங்களையும் கூறுமாற்றால் தணிகை மலையின் சிறப்பினைப் பாரித்து விளம்புகின்றனர். இவ்வண்ணம் இத் தணிகையின் சிறப்பினை யியம்பிப் பின்னர்,

"அத்தகு வரைப்பின் எழுசுனை யாடி
 அருந்தவ மாதிக ளியற்றின்
 சித்தமா சிரிய விழிஞரு மொல்லை
 சிவத்தினைச் சிவணுவர் கண்டீர்
 இத்தகு முனிவ ரெழுவர்க்கு நந்தி
 யெம்பிராற் குரியமா ணாக்கன்
 மெய்த்தவக் குமரன் விளக்கிய ததனை
 வினைச்சம மிலார்க்குரைக் கொணாதால்"        

(-77)

எனவரும் இதன்கண் திருத்தணிகைமலை தரும் பயனும் இத்தணிகைப் புராண வரலாறும் கூறி, இது கேட்டற்குரிய தகுதி யுடையோரையும் முனிவர் பேரன்பு ததும்பப் பேசுகின்றனர். பின்னர் இதன்கண் சுட்டிய முனிவர் வரலாறும் மொழிகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:23:02(இந்திய நேரம்)