தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

!!!!!!!!!!!!!!Thanikai Puranam!!!!!!!!!!!!!!

(4) வீராட்டகாசப் படலம்

இதன்கண், திருக்கயிலையில் இறைவன் இறைவியோடும் இளங் குழவியாகிய முருகப்பெருமானோடும் வீற்றிருக்கும் பொழுது ஆங்கு வந்த சந்திரகாசன் என்னும் முனிவன் இறைவனைக் கண்டு அன்பாலுளமுருகி வழிபாடியற்றி இறைவனை வாயார வாழ்த்துகின்ற பாடல்கள் தேவாரமும் திருவாசகமும் போல ஆற்றவும் இனியனவாக விளங்குகின்றன. இப்பாடல்கள் சைவசமயத் தத்துவங்களைப் பெரிதும் தம்முட் கொண்டுள்ளன.

இப் படலத்தில் முருகப் பெருமான் பிரமன் செருக்கொழித்துச் சிறையிட்டமையும், திருவேங்கடமலை வருணனையும் மிகவும் அழகாகக் கூறப்படுகின்றன. இப் படலத்தில் பிரமனைச் சிறை வீடு செய்யத் திருவுளங் கொண்டு சிவபெருமான் முருகப் பெருமானைத் தன்பால் அழைத்துக் கூறும் மொழிகள் அறிவுரைகளோ? வேண்டுகோளோ? என்று துணிய வொண்ணாதபடி முனிவரால் மிகவும் திறம்படக் கூறப்பட்டிருக்கின்றன.

"விடையு கைத்தவன் பாணிணிக் கிலக்கண மேனாள்
 வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலய மாமுனிக்குத்
 திடமு றுத்திஅம் மொழிக்கெதிர் ஆக்கிய தென்சொல்"

ஆகிய செந்தமிழ்க்குக் கடவுளாகிய முருகப்பெருமான் வடமொழியிலியன்ற மநுநீதி முதலியவற்றைச் சிறிதும் மதித்திடான் என்று கருதிப் போலும் செந்தமிழ் மறையாகிய திருக்குறள்களையே அவ்விடையுகைத்தவன் எடுத்துக்காட்டித் தெருட்டுகின்ற அருமையை நோக்குமின்! 'மைந்தகேள்!'

"பேதைமைப் பாலினாதல் பெருங்கிழமையினா னாதல்
 மேதக நட்டோர் மாட்டும் விரவிடும் பிழைக ளெல்லாம்
 காதுதற் பால வல்ல காதிடிற் கண்ணி னோடி
 நோதுக வோச்சி மெல்ல நோன்றவே யெறிகு வாரால் "

(105)

என்பது சிவபெருமான் கூற்று.

இனி இதன்கண், கடவுள் ஒருவனே ஆவன் அவனையே சிவன் என்றும் முருகன் என்றும் அறிஞர் கூறுவர். சிவனுக்கு முருகன் மகன் என்று கூறுவது பௌராணிக மதமேயன்றிப் பிறிதில்லை என்று தேற்றுவார் நம் கச்சியப்ப முனிவர்,

"தனக்குத் தானேமக னாகிய தத்துவன்
 தனக்குத் தானேபொரு தாவருங் குருவு மாய்த்
 தனக்குத்தா னேயருட் டத்துவங் கேட்டலும்
 தனக்குத் தா னிகரினான் றழங்கிநின் றாடினான்."

(வீரா -118)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:23:13(இந்திய நேரம்)