Primary tabs
இப் படலத்தின்கண் முனிவர்பெருமான் இத்தணிகைப் புராணம் பயில்வோரை முழுவதும் தத்துவ ஆராய்ச்சியில் இறக்கி விட்டுவிடுகின்றனர். முனிவர் பெருமான் இப்படலத்தில் தமது இயற்கை மதிநுட்பத்தாலும் நல்லாசிரியரையடுத்துப் பயின்றமையாலும் தாம் எய்திய மெய்யுணர்வைப் பயில்வோர் எண்மையாக வுணர்ந்து தமதாக்கிக் கொள்ளும்படி செய்திருக்கின்றனர். நூலாசிரியரே இப்படலத்தின் இறுதியில் இவ்வுண்மையைப் பெருமிதம்படக் கூறுகின்றனர். "பொருவில் ஆகமத்தில் உயர் உப தேசக் கலையினைப் புகன்றவர புகன்றாம்" என்பது நூலாசிரியர் கூற்றாகும்.
யாமறிந்த வரையில் தத்துவ ஆராய்ச்சியின் வாயிலாக அஃதாவது - அறிவு கருவியாகக் கொண்டு காணப்பட்ட உலகப் பொருளை ஆராய்ந்து அளவைகளாலே கடவுளியல்பு கூறுகின்ற சமயங்களுள் வைத்துச் சைவ சமயத்திற்கு ஈடான மற்றொருசமயம் இருப்பதாகத் தெரியவில்லை. இக்காலத்தே வளர்ந்து வருகின்ற விஞ்ஞானம் என்னும் பூத நூலறிவுக்கு முழுவதும் பொருந்தி வருவதும் இந்தச் சைவ சமயமேயாகும். இந்தச் சைவ சமயத்தின் வேர் தமிழ் நாட்டிலே தமிழ்மொழியிலே இருப்பதனை யாம் உணர்ந்திருக்கின்றோம். அதனால் யாம் தமிழோடு சைவ சமயமே மிகவும் நெருங்கிய தொடர்புடையது என்று கருதுகின்றோம். இச் சைவ சமய நூல்கள் மெய்கண்ட நூல்கள் என்று போற்றப்படுவது மிகவும் பொருத்தமே என்றும் எண்ணுகின்றோம். இந்த மெய்கண்ட நூல்களின் சாறாகத் திகழ்கின்றது நந்தியுபதேசப் படலம். ஆதலால் இப்படலம் ஒன்றே ஒரு மாபெருந் தத்துவ நூலாகவும் விளங்குகின்றது. இப் படலத்தில் முனிவர் மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகத்தைப் பெரிதும் நினைவு கூர்ந்து பாடுகின்றார். அதனை,
(52)
(53)