Primary tabs
கூடும்? என்றும் வினவி விடாது முயன்று வந்த பிள்ளையவர்கள் 1955 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்குச் சென்றிருந்த பொழுது அந்த மாவட்டத்துள்ள மேலூர், மாவட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் புலவர் உயர்திரு வீ. குமாரசாமி ஐயர் அவர்களைக் கண்டபொழுது வழக்கம்போலக் கந்தசாமியார் தணிகைப் புராண உரைச் சுவடியைப்பற்றி வினவினார்கள். வீர சைவப் பெருமகனாராகிய குமாரசாமியையரவர்கள் கந்தசாமியாரவர்கள்பால் நெருங்கிப் பழகிய மாணவருள் ஒருவராவார். மேலும் கந்தசாமியார் அவர்கள் தணிகைப் புராணத்திற்கு உரை காணும்பொழுது அவ்வுரையினை ஏட்டில் எழுதி அப் பேராசிரியர்க்கு உதவி செய்தவரும் இக் குமாரசாமியையரவர்களே யாவர். கந்தசாமியார் அவர்கள்பாலிருந்த தணிகைப் புராணவுரை யிருக்குமிடத்தை ஆராய்ந்தறிந்திருந்த ஐயரவர்கள் அந்தவுரை கந்தசாமியார் தாயத்தார் பாலிருக்கின்றதென்றும், அதனைத் தம் பள்ளித் தலைமையாசிரியர் திரு. சதாசிவத்தேவர் கந்தசாமியார் தாயத்தார்க்கு நெருங்கிய உறவினர் ஆதலால் அவர்கள் வாயிலாய் அவ்வுரைச் சுவடியைப் பெறுதல் கூடும் என்றும் கூறி அத் தலைமையாசிரியர்பால் பிள்ளையவர்களை அழைத்துப் போய் அறிமுகஞ் செய்து வைத்தனர்.
திரு. சதாசிவத் தேவரவர்கள் அவ்வுரைக்குத் தகுந்த கைம்மாறு கொடுப்பீர்களாயின் அதனை வாங்கித் தருதல் கூடும் என்று கூறவே பிள்ளையவர்கள் அவ்வுரைக்குத் தகுந்த கைம்மாறு தருவதாக உடம்பட்டு அவ்வுரைச்சுவடியிலிருந்து பத்துச் செய்யுள் உரையைப் படியெடுத்துத் தமக்கு அனுப்பும்படியும் கூறினார்கள். தேவரும் அவ்வாறே பத்துச்செய்யுள் உரையைப் படியெடுத்தனுப்பித் தணிகைப் புராணத்திலுள்ள மூவாயிரத்து நூற்றறுபத்தொரு செய்யுள்களில் கந்தசாமியார் உரை ஆயிரத்துத் தொளாயிரத் தெழுபத்தாறு செய்யுள்கட்கு மட்டுமே இருக்கின்றது என்றும், எஞ்சிய செய்யுள்கட்கு அவர் உரை இல்லை என்றும் அறிவித்தனர்.
திரு. சதாசிவத் தேவரவர்களாற் படியெடுத் தனுப்பப்பட்ட அப் பேராசிரியர் உரையைக் கண்டு மகிழ்ந்த பிள்ளையவர்கள் அவர்கள் உரை முழுநூலுக்கும் இல்லாமைக்காக வருந்தினார்கள். கிடைத்த உரையை உடனே வாங்கிக்கொள்ளத் துணிந்தார்கள். அக் கையெழுத்துப் படியை விலைகொடுத்து வாங்கிக்கொள்வதாகவும் திரு. தேவர் அவர்களுக்கும் கடிதமெழுதி அறிவித்தார்கள்.
கி. பி. 1956 ஆம் ஆண்டு திரு. சதாசிவத் தேவரவர்கள் மேலூர் உயர்நிலைப் பள்ளியினின்றும் ஓய்வு பெற்று முருகப் பெருமானுடைய படைவீடாறனுள் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்திலுள்ள