Primary tabs
சிவக்குறியைப் பணிவோர் கல்விச் செல்வத்தை அடையுமாறும்அருள்புரியவேண்டும்" என்று கூறி வேண்டிக்கொண்டான். முருகக் கடவுளும் அவ்வாறே திருவருள்செய்து மறைந்தருளினார்.
நாரணன் அருள்பெறுதல்
திருமால் தாம் இழந்த செல்வங்களை மீண்டும் அடைய எண்ணினார். வைகுந்தத்தைவிட்டுத் திருத்தணிகைக்கு மேற்குப் பக்கத்தில் அரையோசனை தொலைவில் அமைந்த ஒரு பொழிலை யடைந்தார். அவ்விடத்திலே பெரிய நகரம் ஒன்றை அமைத்துப் புனிதநீர் ஒன்றினையும் உண்டாக்கிச் சிவக்குறியை நிலைநிறுத்தி அங்கமர்ந்து தவஞ் செய்துகொண்டிருந்தார். சிவபிரான் திருமாலுக்கு முன்னே தோன்றினார். "அன்பனே ! நீ விரும்பியவைகளைத் தணிகைமலைக்குச் சென்று அடைவாயாக" என்று கூறி மறைந்தருளினார். பிறகு திருமால் தணிகைமலையை அடைந்து குமார தீர்த்தத்தில் நீராடித் திருவெண்ணீறு சிவகண்மணிமாலை முதலியவைகளை அணிந்து, தணிகைமலைக்கு மேற்குப் பக்கத்தில் விளங்கின ஒரு பொய்கைக்கரையில் அமர்ந்து தம்முடைய உடலிலே புற்றுமூடப் பலகாலந் தவஞ் செய்தார். திருமாலின் தவத்திற் கிரங்கிய தணிகாசல முருகப்பிரான் மயிலூர்தியின் மீது எழுந்தருளிவந்து காட்சிதந்தார். திருமாலைப் பார்த்து, "நீ தவஞ்செய்து உடல் இளைத்தனை" என்று கூறி உடலைத் தடவிக்கொடுத்தார். திருமால் தம்முடைய கைகளைக் கூப்பி முருகப்பெருமானைப் போற்றினார். பலவாறு புகழ்ந்தார்; தாருகாசுரனால் கவரப்பட்ட தம்முடைய உருளைப்படை, சங்கு முதலியவைகளைத் தாம் மீளவும் அடையவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். முருகப்பெருமான் அவைகளைத் திருமாலுக்கு வழங்கியருளினார்; இந்தப் பொய்கையில், பங்குனியுத்திரமும் ஞாயிற்றுக்கிழமையுங் கூடிய நன்னாளில் நீராடுபவர்கள் தாம் நினைத்தவைகளையெல்லாம் அடைவர் என்று கூறி மறைந்தருளினார்.
இந்திரன் அருள்பெறுதல்
அசுரக் கூட்டங்களை அழித்தருளிய அறுமுகப்பரமன், விண்ணவர் நல்ல தவச் செல்வம் பெற்றிராமையை உள்ளத் தமைத்து அவ்வானவர்- களுடைய மிகுந்த செல்வங்களைத் திரும்பக் கொடுக்கவில்லை. இந்திரன் தன்னுடைய செல்வத்தை மீளவும் அடைய வேண்டும் என்று உள்ளத்திலே எண்ணினான். விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்தை அடைந்தான். தணிகைமலைக்குத் தெற்குப் பக்கத்தில் அரையோசனை தொலைவில் இருந்த கடம்ப மரக்காவை அடைந்து ஆங்கொரு புனிதநீர் அமைத்துச் சிவபெருமானுடைய திருவடிவத்தையும் அமைத்து ஐம்பொறிகளையும்