Primary tabs
அடக்கி வழிபாடு செய்தான். இந்திரனால் நிலைபெறுத்தப்பட்ட சிவபிரான் அமராபதீசர் என்று பெயர் பெற்றார்.
பிறகு இந்திரன் தணிகைமலையை அடைந்தான். மலைக்குத் தென்பக்கத்தில் ஒரு சுனையிருத்தலைக் கண்டான். முருகக் கடவுளை நாள்தோறும் வழிபட எண்ணினான்; தேவர் உலகில் இருந்து கருங்குவளைக்கொடி ஒன்றை வரவழைத்தான். அதனைச் சுனையில் வளர்க்கக் கருதினான். கரையில் ஆனைமுகக் கடவுளை அமைத்து வழிபட்டான். அதனால் அக் கடவுளுக்குச், செங்கழுநீர் விநாயகர் என்று பெயர் உண்டாகியது. காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று வேளைகளினும் கருங்குவளை மலர அம்மலர்களால் இந்திரன் தணிகாசல முருகோனை நாள்தோறும் முக்காலமும் வழிபட்டான். முருகக்கடவுள் இந்திரனுக்கு முன்னே தோன்றி, "உனக்கு வேண்டியது யாது ?" என்று கேட்டார். இந்திரன் முருகப் பெருமானைநோக்கித், "தேவர்களனைவரும் தேவரீரை வழிபடுதற்கு இங்கு வந்துள்ளார்கள். அவுணர்களால் கைப்பற்றப்பட்ட எங்களுடைய செல்வங்களெல்லாம் இங்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை நாங்கள் பெறுதற்கு விரும்புகின்றோம். மேலும் இச் சுனையில் கருங்குவளைமலர்கள் எக்காலத்திலேயும் மாறாமல் மலரவும் தேவரீர் இம்மலர்களை அணியவும் அதனால் எனக்கு இடர்ஒழியவும், இப்புனிதநீரைத் தெளித்துக் கொண்டவர்களுடைய தீவினைகள் யாவும் ஒழியவும் திருவருள் செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டான். முருகப்பெருமான் அவ்வாறே அருளினார். காமதேனு, சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி முதலியவைகளையெல்லாம் இந்திரன் அடையுமாறு அருள் செய்து மறைந்தார். இந்திரநீலச்சுனையின் புனிதநீரும் மலரும் இன்றும் முருகப்பெருமானுக்குப் பயன்படுகின்றன. இதனால் திருத்தணிகைக்கு இந்திரநகரம் என்னும் பெயரும்
உண்டாகியது.
நாகம் அருள்பெறுதல்
முன்னாளில் தேவர்கள் போர்புரியுங்காலத்தில் இறவாநிலையை அடைதற்கு எண்ணினார்கள். அதன்பொருட்டு அமுதத்தை யுண்ண முடிவுசெய்தார்கள். அமுதத்தை அடையும்பொருட்டுத் தேவர்களும் அசுரர்களும் மந்தரமலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கித் தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒருபக்கமுமாக நின்று இழுத்துப் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்பொழுது அப்பாம்பு மிகுந்த வருத்தத்தையடைந்து நஞ்சினைக் கக்கியது. அதனைக் கண்டு அசுரர்களும் தேவர்களும் நான்குபக்கங்களினும் ஓடலானார்கள். ஒடியவர்கள் இறைவனை அடைந்து அப்பெருமானுடைய அருளைப்பெற்று மீண்டுங் கடைந்து அமுதத்தை