Primary tabs
யெடுத்தார்கள். கடல்கடைதற்குக் கயிறாக வமைந்த வாசுகி மந்தர மலை உராய்ந்தபடியினால் தன்னுடைய உடல்முழுவதுந் தோல் கழன்று புண்ணாகி யிருத்தலைக் கண்டது. அதனுடைய ஆற்றலுங் குறைவுபட்டிருந்தது. அவைகளைப் போக்கிக்கொள்ள எண்ணிய வாசுகி தணிகைமலையை அடைந்தது. குமாரதீர்த்தத்தில் நீராடி மலைமீது ஏறி முருகவேளைப் போற்றி வழிபட்டுக்கொண்டு அவ்விடமே தங்கியிருந்தது. மறுநாள் மேற்குத்திக்கிலே சுனை யொன்றைக் கண்டு அதனி்ல் நீராடி முருகவேளைப் போற்றியது. பிறகு தவஞ் செய்துகொண்டிருந்தது. இதனால் வாசுகியின் தொல்லை நீங்கியது. மேலும் வாசுகி முருகப்பெருமானைப் போற்றி வழிபட்டுத் தன்னுடைய நாகநாட்டை யடைந்தது. வாசுகி யாடிய படியினால் நாகசுனையென்று பெயர்பெற்ற அப்புனிதநீரில் ஆதிசேடன் திருமாலோடு வந்து நீராடிப் பலவகையான செல்வங்களையும் முருகப்பெருமானுடைய திருவருளையும் பெற்றுச்சென்றான். வலிமையை விரும்புவோரும், தமக்குண்டாகிய நோயைப் போக்க எண்ணியவர்களும், புகழை விரும்பியவர்களும் செல்வத்தை விரும்பியவர்களும் வள்ளன்மையை விரும்பியவர்களும் இச்சுனையில் நீராடினால் முருகப்பெருமானுடைய திருவருளையும் தாம் விரும்பியவைகளையும் விரைவிற்
பெறுவார்கள்.
இராமன் அருள்பெறுதல்
முருகப்பெருமானுடைய திருவருட்குரிய அன்பர்கள் இல்லறத்திலேயிருந்தாலும் குற்றமற்ற சிறப்புடையோராவர். துறவறத்திலே நின்றாலும் முருகப்பெருமானை உள்ளத்தின்கண்ணே நினையாதவர் நல்வினை தீவினை என்னும் இருவினைகளையும் வெல்ல முடியாதவர்களாவர். இராமபிரான் காட்டில் தங்கியிருந்த காலத்தில், இராவணன் வஞ்சகஞ்செய்து சீதாபிராட்டியை எடுத்துக் கொண்டுபோய் இலங்கையில் மறைத்து வைத்துவிட்டபடியால் துன்பக்கடலில் மூழ்கினார். அகத்தியமுனிவரிடம் போய்ச் சீதையைக் கவர்ந்த கொடியவர்களை வெல்லும் ஆற்றலை எனக்குத் தந்தருளவேண்டும் என்று வணங்கி வேண்டிக்கொண்டார். அகத்திய முனிவர் திருவெண்ணீறு சிவகண்மணி ஆகியவைகளின் பெருமையையும் அவைகளின் இலக்கணத்தையும் இராமபிரானுக்கு இயம்பினார். இவைகளைப் பற்றுக்கோடாகக்கொண்டு சிவபூசைசெய்து உன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக என்று சொன்னார். அகத்தியர் அருளியபடியே இராமபிரான் சிவபூசை செய்தார். சிவபிரான் இராமபிரான் திருமுன்பு தோன்றினார். இராமபிரானைப் பார்த்து, "உனக்குச் சிவஞானத்தைத் தருகிறோம். அதனை நீ பெறுவாயானால் மனித வாழ்க்கை மாயை என்பது உனக்குப் புலப்படும்" என்று கூறினார்.
இதனைக்