Primary tabs
கேட்ட இராமபிரான் சிவபிரானுடைய திருவருளை மறுத்தற்கு அஞ்சினார். சிவபெருமானுடைய திருவடிகளிற் பலமுறை விழுந்து வணங்கினார். "ஐயனே ! அடியேன் இருவினையினிடத்திலே அகப்பட்டு மயங்கித் திரிபவன். அரக்கர்களுடைய செய்கைகளை எண்ணும் பொழுதெல்லாம் எனக்கு மிகுந்த சினம் உண்டாகின்றது. சீதையினுடைய அழகை நினைக்கும் பொழுதெல்லாம் காமம் உண்டாகின்றது" என்று கூறினார். இதனைக்கேட்ட சிவபிரான் நகைத்தார். இராமபிரானுக்கு வேண்டிய ஆற்றலையும் படைக்கலங்களையுந் தந்து மறைந்தருளினார்.
இராமபிரான் அவைகளின் உதவியால் இராவணனை அழித்தார். பிறகு இராமேசுவரத்தை அடைந்து சிவபூசை செய்தார். அந்தோ சிவபிரான் எனக்கு அறிவுரைவழங்கி மெய்யறிவு கொடுப்பதாகக் கூறியபொழுது மோகத்தின் வழிப்பட்டவனாய் நல்லசமயத்தை இழந்துவிட்டேன் என்று உள்ளம் இரங்கினார். இனி மேலாயினும் மெய்யறிவுபெற வேண்டும் என்று எண்ணினார். சிவபெருமானை எண்ணி யோகத்தில் இருந்தார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி இராமபிரானைப் பார்த்து, "உன்னுடைய உள்ளம் இன்னும் அடங்கவில்லை, உள்ளம் அடங்காவிட்டால் சிவஞானம் உண்டாக மாட்டாது. நீ, திருத்தணிகைக்குச் சென்றால் மனம் அடங்கும்; மெய்யறிவும் பெறுவாய்" என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். இராமபிரான் திருத்தணிகையை அடைந்தார். அங்குள்ள நந்தி தீர்த்தம் முதலிய புனிதநீர்களில் நீராடித் தவஞ் செய்தார். முருகப்பெருமான் இராமபிரான் முன்னர்த் தோன்றி்ச் சிவஞானத்தைக் கொடுத்தருளினார். இராவணனைக் கொன்று வெற்றிகொண்டு வந்தமையால் இராமபிரானுக்கு விசயராகவன் என்னும் பெயர் உண்டாகியது. [இவ் விசயராகவருடைய திருக்கோயில் கீழ்த் திருத்தணியில் ஆறுமுகசாமி கோயிலுக்குத் தென்பால் உள்ளது.]
வள்ளியம்மை களவு
திருமாலின் பெண்களாகிய சுந்தரி என்பவளும், அமுதவல்லி என்பவளும் முருகப்பெருமானைத் திருமணம்புரிய எண்ணிக் கங்கைச் சரவணப்பொய்கையினிடத்திலே முன்னாளில் தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். முருகப்பெருமான் அவ்விடத்தில் எழுந்தருளி, "அமுதவல்லியே ! நீ இந்திரனிடஞ்சென்று வளர்வாயாக. சுந்தரியே ! நீ நிலவுலகில் சிவமுனிவன்பால் தோன்றி வேடர் மரபிலே வளர்வாயாக. உங்களிருவருடைய எண்ணமும் நிறைவேறுமாறு பிறகு யாம்வந்து திருமணம் புரிந்துகொள்வோம்" என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். அவ்வாறே அமுத