Primary tabs
மங்கலப் பொலிவு மிக்க மாடமாளிகைகளும் மணமலிந்த கூந்தலையுடைய மகளிர்
குழாங்களும் விருந்தினரை வரவேற்று ஊட்டும் மகிழ்ச்சியும் கொடையால் வரும்
புகழ்ச்சியும் நல்லோர்கள் வாழ்த்தும் நன்மக்கட் பேறும் நற்பண்பும் அந்நகரிற்
பெருகியிருந்தன. குசேலர் வாழ்ந்த நகரம் இச் சிறப்புடைய தாயிற்றென்றால் அவர்
தங்கிய மனையின் சிறப்பைக் கூறவும் வேண்டுமோ?
ஊர்ப்புறத்திற் செல்லச் செல்லப் பல மன்னரும் முன்னோரும் உடன்
வந்தனர். தூரத்திருந்தே தம் நகரத்தை நோக்கிச் சென்றார். கண்ணபிரான்
தண்ணருளால் இன்னும் நாம் காணும் காட்சிகள் பல உள்ளன போலும் என
நினைத்துச் சென்று மதில்வாயிலை யடைந்தார். அந் நகரத்து மாந்தர் பலரும்
கையுறையோடும் களிப்புப் பொங்க மங்கலப் பொருள்கள் ஏந்தி எதிர்வந்து
கண்டனர். முகமலர்ந்து "நாங்கள் வாழ்ந்தனம் வாழ்ந்தனம்" என்று குசேலர்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். தேர்மேல் வந்த குசேலரைப் பல்லக்கி
லேற்றினர். குடைகவித்துக் கொண்டு சென்றனர். பலவகை வாத்திய முழங்க வெண்
சாமரம்வீசத், தேரும் சேனையும் சூழ மங்கல வாழ்த்து மறையவர் பாட மன்னரைப்
போல வீதியில் வந்தார் குசேலர். மங்கையர் மாடங்களிலிருந்து சாளரங்களிற்
கண்வைத்து மகிழ்ந்து பார்த்தனர். இம்மறையோன் செய்த புண்ணியம் எதுவோ
இத்தகைய சிறப்புப் பெற்றுவருகின்றான் என்று தமக்குட் பலவாறு கூறினர்.
அம்மங்கையரிற் சிலர் "கிள்ளிப் பற்றுவதற்குஞ்" சதையில்லாத எலும்புந்
தோலுமாயிருந்த இம்மறையோன் பழங்கந்தை யுடையன்றி வேறு பார்த்தறியாதவன்;
இப்பொழுது பாருங்கள். காமனைப் போலக் கட்டழகு வாய்ந்த மேனியனாக
வருகின்றான்" என்றனர். காய் கனி கிழங்குகளை யுண்டு கானகந்திரிந்து பாசபந்தம்
நீங்கத் தவம் புரிவார் பலர். அவர்கட்கும் இத்தகைய சிறப்புக் கிடைத்திலது. இவன்
அரியதவம் ஒன்றும் புரியாமலே பெருஞ் சிறப்புப் பெற்றான்;