தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

இங்ஙனம் நகர் வாயில்களைக் கடந்து, கடலையும் முன் போற் கடந்து தம்
ஊர்க்காட்டை நெருங்கும்பொழுது தாம் அணிந்திருந்த கந்தைத் துணி
பொன்னாடையாகவும், பூண்டிருந்த துளசி மாலை முத்து மாலையாகவும் மற்றுமுள்ள
அணிகள் நவமணிப் பூண்களாகவும் மாறி உடலும் பூரிப்புற்று மன்னர்
மன்னர் போல் திகழக் கண்டு மயங்கி இவை யெல்லாம் கண்ணபிரான் திருவருளால்
ஆனவை என்று கருதி வழி நடந்து சென்றார். இவர் வருகையைக் கண்ட மன்னர்
மன்னர் பலர் இவர் அடி வணங்கி நின்று வேண்டும் ஏவல் புரிந்து பொற்றேர்
கொண்டு வந்து குசேலரை ஏற்றி, நாற்படையும் புடைசூழ அவந்தி நகருட்
புகுந்தனர்.

இத்துணைப் பெருமையும் சிறப்பும் பேறும் கிடைத்தற்குக் காரணமானது
குசேல முனிவர் செய்த அருந்தவமேயாம். தவத்துடன் தன்னுடன் பயின்ற
நண்பரான கண்ணபிரான் பழமை மறவாது திருவருள் புரிந்த திறமுமாம்.
                           --------

              3. குசேலர் வைகுந்தம் அடைந்தது

குசேல முனிவர் மிக்க சிறப்புடன் தம் நகரத்தை யடுத்து வந்தார். அவர்
வாழ்ந்த சிற்றூர் பெருநகரமாய் விளங்கியது. காடுகள் எங்கணும் மாடமாளிகைகள்
உண்டாகித் திகழ்ந்தன. பொன்னகரம் போலவும் விசுவாமித்திரன் பொன்னுலகத்திற்கு
மாறாகப் படைத்த மற்றொரு பொன்னுலகம் போலவும் விளங்கியது. அமரருங்
கண்டு வியந்தார். குபேரன் வாழும் அளகாபுரியும் இந்நகர்க்குச் சிறியது தான் என்று
கூறும்படி பெருநகரமா யமைந்தது. அகழியும் கோட்டையும் அமைந்து பேரரசர்
தலைநகரம் போல நிலை பெற்று நின்றது. மறை பயிலும் பள்ளியும் மற்றைக் கலை
பல பயிலும் பள்ளிகளும் ஆடலரங்கும் பாடற் பள்ளியும் அறச்சாலைகளும் பல
தெரு எங்கணும் இருந்தன. யானைக் கூட்டம் செல்லும் மறுகும் குதிரைக்குழாம்
செல்லும் செண்டுவெளியும் தேர் நடக்கும் தெருவும், பகைவர் அஞ்சும்படி
வாட்போர் பயிலும் மறுகும் ஆங்கு இருந்தன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:51:39(இந்திய நேரம்)