Primary tabs
பெயருடன் வந்து கொடியோரைக் கொன்று அடியாரைப் புரக்க வந்த 
அற்புதமே! கற்கியாப் பின்னர் வரக் கருத்துக் கொள்ளும் கடவுளே! என்று பத்துப் 
பிறப்பிற் சித்தம் கூர்ந்து சிந்தித்துத் திருமாலின் கல்யாண குணங்களைக் கருத்தில் 
இருத்தித் துதித்து வணங்கினார்.
இவ்வாறு வணங்கித் துதித்த குசேல முனிவர்க்கு வேண்டும் வரம் அளிக்கக் 
கருதிய எம்பெருமான் தன் தெய்வவடித்தோடு முன்வந்து நின்றான். கண்டவுடன் 
விரைந்து எழுந்து, கரையுடைந்த வெள்ளம் போலவும், தாய்வரவு கண்ட கன்று 
போலவும், விரைந்து வந்து கமல மலர்த் திருவடியில் விழுந்தார்; பின் எழுந்தார்; 
முடிமேற் கை கூப்பியவண்ணமாக மும்முறை வலம் வந்தார். மீண்டும் திருவடியில் 
விழுந்து பின் பூசைபுரிந்தார். முடவனிருக்கும் இடம் நாடிக் கங்கைநதி வந்தது 
போல இந்த மடவனிருக்கும் இடந்தேடி வந்தனையே! புண்ணியதலங்கள் பல 
சென்றும் காடு மலை திரிந்தும் ஊணுறக்கமின்றி ஐம்புலன்களையொடுக்கித் தவம் 
புரிந்தும் காண்பதற்கரிய நின் திருக்கோலக்காட்சி பாவியெனக்கும் கிட்டிற்றே! 
நான்மறைகள் ஓலமிடினும் காணற் கரியதன்றோ நின் காட்சி! எளியேற்குக் 
கிடைத்தது புதுமை புதுமை! என்னை ஒரு பொருளாகக் கொண்ட நின் 
றிருவடிகளை யெங்ஙனம் புகழ்வேன். நின்னைக் கண்டு நான் பேரின்பம் பெற்றேன்; 
என்னைக் கண்டு நீ எப்பேறு பெறுவாய்! மழையைக் கண்டு வையத்து மக்கள் 
மனமகிழ்வும் இன்பமும் எய்துவார்: மக்களைக் கண்டு மழை இன்பம் 
அடைவதுண்டோ? மக்களால் மழைக்குக் கைம்மாறு ஏதேனும் உண்டோ? 
அதுபோலவே நின்னருளும் எனக்கின்பம் தருகின்றது என்று புகழ்ந்தேத்தினார்.
திருமால் திருவருள் சுரந்து "நீ விரும்பியது யாது கூறுக"? என்றான். 
அப்போது குசேலர் வணங்கி "நீ எனக்குப் பெருஞ் செல்வப் பேறளித்தாய்; 
அதனாற் பல தீமை விளையும் என அஞ்சுகின்றேன். முன்னிருந்த வறுமையையே 
எனக்கு நல்குக. நான் வேண்டும் வரம் இதுவே" என்