தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

KUSELOBAKKIYANAM

பதிப்புரை

செந்தமிழ் நாடு எனப்பட்ட நந்தமிழகத்துப் பல்வேறிடங்களிற் பண்டைக் கால
முதல் இன்றுவரை எண்ணிறந்த புலவர்கள் தோன்றி இலக்கணம் இலக்கியமாகிய
நூல்கள் பல இயற்றி வைத்து மறைந்தனர் என்பது எவரும் அறிந்த தொன்றே. அந்
நூல்கள் யாவும் காணக் கிடைக்கின்றனவா? இன்று நாம் காண்பன சிலவே. ஏட்டில்
எழுதப்பட்ட எண்ணிறந்த நூல்கள் புனல் வாய்ப்பட்டும் கனல்வாய்ப்பட்டும்
செல்வாய்ப்பட்டும் மறைந்தொழிந்தன. தமிழ் மக்கள் செய்த தவப்பயனால்
இலக்கணத்தில் தொல்காப்பியமும் இலக்கியத்தில் திருக்குறளும் நிலைநின்று நம்
மொழிப் பெருமையும் அருமையும் சிறப்பும் சீர்மையும் பிறநாட்டினர்க்கும்
காட்டுகின்றன. பெருங்காவியங்கள் ஐந்தின் மூன்றும் பத்துப்பாட்டும் எட்டுத்
தொகையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் அச்சிற் பதிக்கப்பட்டு அழியா
வகை தமிழ் மக்களாற் போற்றப்பட்டு வருவதால் இனி நம் நாட்டின்
சிறப்புக்குன்றாது நின்று நிலவும் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. மொழி
வளர்ச்சியே நாட்டின் அறிவு வளர்ச்சியாம்.

இக்காலத்திற் செய்யுள் நூல்கள் இயற்றுவோர் சிலரே. உரை நடை நூல்கள்
அளவிறந்தன அச்சிற் பதிக்கப்பட்டு வெளிவருகின்றன. இளமை மாணவர்க்குச்
செய்யுட்கள் மனப்பாட மாக்கும் பயிற்சி வரவரக் குறைகின்றது. மொழிப் புலமை
வேண்டுவோர் இளமையிற் பாக்களை மனப்பாடமாக்கிக் கற்பதே நலமாகும். எளிய
இனிய நன்னெறி பயப்பன வாகிய நூல்களிற் பயின்று சிறந்த கவிகளை ஆய்ந்து
மறந்துவிடாது மனத்துள் இருத்துமாறு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
இளமாணவர்க்குரிய நூல்கள் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,நன்னெறி, நல்வழி,
மூதுரை முதலிய நீதிநூல்களும்; நளவெண்பா, அரிச்சந்திர புராணம்,
குசேலோபாக்கியானம் போன்ற கதை நூல்களும், பாரதியார், கவிமணி போன்ற
இக்காலப் புலவர் இயற்றிய நாடுமொழி இனங்குறித்த பாடல் நூல்களும் ஆம்.
இவற்றைக் கற்று மொழியறிவு பெருகிய பின்னரே பத்துப் பாட்டு


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:56:28(இந்திய நேரம்)