Primary tabs
கருணாமிர்த சாகரம் மறுபதிப்புரை
என்மொழி
என்இனம் என் நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன்.
- என்பதற்கொப்பக் கொள்கைகள் வகுத்துச் செயற்பட்டு வருகிறது கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை. இதன் கொள்கைகளில் ஒன்றுதான் பழம் பெரும் அரிய நூல்களை மறுபதிப்புச் செய்வது. தமிழர்களின் கலை, நாகரிகம், பண்பாடு, மொழி, முதலியன உயர்ந்தோங்கி விளங்கத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில், கருணாமிர்த சாகரம் என்னும் இசைக்கருவூலத்தை மறுபதிப்புச் செய்து வெளியிடுவதில் மிகவும் பெருமிதப்படுகிறோம். இந்த நூலில் உள்ள அரிய வரலாற்று உண்மைகள் இவ்வளவு நாள்கள் உலகுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்படாமலே இருந்து வருவதைப் பார்க்கும்போது ஊழிக்கால வரலாறு கொண்ட தமிழர்கள் எவ்வாறு உறங்கிக் கிடக்கிறார்கள் என்பது தெற்றென விளங்கும்.
1993 ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதர் மன்றம் என்னும் அமைப்பு உருவாக்கப்பெற்றது. அந்த அமைப்பின் வழித் ‘‘திராவிடர் இசை’’ என்னும் அரிய நூலை வெளியிட்டோம். அப்போதுதான் ஆபிரகாம் பண்டிதர் பற்றிய உண்மைகள் பலவும் திரட்டப் பெற்றன.
இந்த நூலைக் கையிலெடுத்தாலே கீழே வைக்க மனமில்லாமல் படித்துக்கொண்டே இருக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பல கலைகளிலும் முழுத்தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதும், எடுத்துக்காட்டாகச் சற்றேறக்குறைய 12000 ஆண்டுகளுக்கு முன்பே 103 பண்களில் இறைவனை வழிபட்டார்கள் என்பதும் நீரில் சென்ற தலைமுடியின் தன்மையையும், அளவையும் கொண்டே அதற்குரிய பெண்ணின் அழகுருவத்தை எழுதினார்கள் என்பது போன்ற சிறப்புத் தகுதிகளும் பெற்றிருந்தார்கள் என்பதும், அதேபோல், பண்டைத் தமிழகத்தைக் கடல்கொள்வதற்கு முன்பே, அஃதாவது முதற்சங்க காலத்துக்கு முன்பே இசை பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி நூல்கள் இருந்துள்ளன என்பதும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் வெவ்வேறான பண்கள் இருந்துள்ளன என்பதும் இன்னோரன்ன பல அடிப்படையான செய்திகளும் இந்நூலுள்ளே பொதிந்து கிடக்கின்றன.
உலகில் முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் குமரிக் கண்டமே என்பதும், அங்கே வாழ்ந்தவர் பதியெழுவறியாப் பழங்குடியினராகிய தமிழரே என்பதும், அங்கே முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழியே என்பதும் பலப்பல ஆதாரங்களுடன் இந்நூலில் நிறுவப் பெறுகின்றன.
ச ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் தமிழே என்பதையும் சமற்கிருதமல்ல என்பதையும் தக்க சரியான, மறுக்கமுடியாத பல உண்மைகளைக் கூறி நிறுவியுள்ளார்.
எல்லா வகையிலும் வல்லவர்களாலேயே இந்நூல் இதுவரை மறுபதிப்புச் செய்து வெளியிடப்படாமலிருக்கும்போது நாம் இதைச் செய்ய முடியுமா? என்ற மலைப்புத் தோன்றியது உண்மை. எப்போதுமே ஆற்றலுக்கு மீறிய செயல்களை எடுத்துப் போட்டுக்கொண்டு செயல்படுவது எங்களுக்கு இயற்கையாகவே அமைந்த ஒன்றாகும் தமிழ்மீதும்,