தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


பெருந்திணையாம் என்றும் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டைக்
காட்டுவர். ஐந்திணைக் காதலர் போலவே பெருந்திணைக் காதலரும்

அன்புடையர், கற்புடையர், ஐந்திணைக்கு இல்லாத பெருந்திணைக்கே
உரிய இலக்கணம் நாணமின்மை. எனினும், நீங்கிய நாணத்தை மீளப் பெற்று
பெருந்திணையர் ஐந்திணையராக நல்வாழ்வு வாழலாம்; சமுதாயப் பழி
யாதுமில்லை என விளக்கித் தம் கருத்துக்கு அந்துவனாரின் நெய்தற்
கலிப்பாக்களைச் சான்றாக்குவர். (410)

அகப்பாட்டுக்கும் அதனைப் படைத்த அகப் புலவர் வாழ்க்கை
முறைக்கும் எவ்வகையானும் இயைபு படுத்துதல், இயைபு படுத்தி விளக்குதல்,
ஆராய்தல், அறவே கூடாது. அங்ஙனம் செய்தல் அகத்திணை இலக்கண
முரண் என்பர். புலவரின் படைப்பாற்றலை ஆராயலாம். அகத்திணை மாந்தர்
தம் பண்பியலை ஆராயலாம். ஆனால், பாடலை அதனைப் படைத்த
ஆசிரியோடு தொடர்புபடுத்தி ஆராய்தல் ஆகாது என்பர்.

உளவியல்

களவொழுக்கத்தில் தலைவன் தன் காமவெம்மையை ஆற்றிக் கொள்ளப்
பாங்கன் பற்றுக் கோடாகின்றான். சிறு பாம்புக் குட்டி காட்டானையை
வருத்தியது போல, அவள் மெல்லுறுப்புக்கள் என்னைத் தாக்கின
(குறுந்தொகை 119) என்று சொல்லுந்தோறும் தலைவனுக்கு மனவேகம்
தணியவும் அறிவு ஒருநிலைக்கு வரவும் காண்கிறோம். இந்நிலையில் தலைவன்
கூற்றாக 25பாக்கள் அமைய இவ்வுளவியலே காரணம் என்பர். (54)

துறைவிளக்கம்

‘யாயும் ஞாயும் யாராகியரோ’(குறுந்தொகை, 40) என்னும் பாடலுக்கு
இயற்கைப் புணர்ச்சி எய்திய தலைவன் நமக்குள் பிரிவு ஏது என்று சொல்லித்
தலைவியை ஆறுதல் செய்தான் எனத் துறை கொள்வர். குரவர் கூட்டிய
கற்பின் முதற்புணர்ச்சியாகவும் கொள்ளலாம் என்று கூறிக் குறிஞ்சித் திணைக்
களவுத் துறைப் பாடலில் முதல் கருப்பொருள்கள் பெரிதும் இடம் பெறுதல்
உண்டு. புணர்ச்சி கூறும் இப்பாடலில் முதலும் கருவும் இடம் பெற்றில.
மலையோ பிறவோ கூறப்பெற்றில. ஆதலின் இல்லத்து நிகழ்ந்த கற்புப்
புணர்ச்சியாகவே கொள்க என விளக்கந் தருவர். (135)

‘நல்ல வேப்பங் காயைத் தலைவி தந்தாலும் அதனை வெல்லக் கட்டி
போன்றது எனக் கூறிச் சுவைத்தகாலம் ஒன்றுண்டு; இப்பொழுது பாரி
பறம்பின் சுனையிலுள்ள தண்ணிய நீரைத் தரினும், சூடாய் உப்புக் கரிக்கும்
என்று கூறுகின்றீர்’ எனத் தோழி தலைவனின் இருவேறு நிலையைக்
குறிக்கின்றாள். இந்நிலைக்கு விளக்கமாக ஆசிரியர், ‘காதல் தொடக்கத்தின்
கவர்ச்சியையும் பொலிவையும் காலப்போக்கில் அதன் தணிவையும்
ஏமாற்றத்தையும் நேர்மாறுபடப் புலப்படுத்தும் உள இயல்பு அறிவியலுக்கும்
நடையியலுக்கும் பொருந்துவதாகும்’ எனக் கூறியிருப்பது நினைந்து
போற்றத்தகும். (143)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:35:52(இந்திய நேரம்)