Primary tabs
பாடியிருப்பதைச் சுட்டிக்காட்டி அம்முறை பிற்காலத்தே கோவையிலக்கியம்
எழக் காரணமாயிற்று என்பர் (339).
நினைத்த அன்புக் காதலியை அடைய முடியாதபோது, இளைஞன்
மடன்மா ஏறி மன்றத்திற்குச் சென்று சான்றோர் முன் தன் வழக்கை
எடுத்துரைப்பான் (கலித்தொகை 139, 141). இதனால் தமிழ்ச் சமுதாயத்தில்
காதல்காக்கும் நிலையங்கள் ஊர்தோறும் நிலவின் என்பது வெளிப்படை எனக்
கூறுவர் (370).
பரத்தையர்
இல்லறத்திற்கு இடையூறாகாத பரத்தையரையே ஐந்திணை
பொருட்படுத்துகின்றது. இப்பரத்தையர் பொருட் பெண்டிரினும் வேறானவர்.
இவரைக் ‘காமக் கிழத்தியர்’ எனத் தொல்காப்பியம் குறிக்கும். தலைவியைப்
பிரிந்து வாழும் தலைவனை அவளோடு சேர்ந்து வாழுமாறு ஒரு பரத்தை
கூறி இல்லற நெறிப்படுத்துகின்றாள் (நற்றிணை 315). அதனால் தான்
பரத்தையரை ‘மனையோள் ஒத்தலின்’ எனத் தொல்காப்பியம் (1096)
தலைவியோடு நிகரான நிலையில் கூறுகிறது. பரத்தையர் தலைவன்
பொருள்களை எல்லாம் கவர்ந்தார் என்றோ, அது காரணமாகத் தலைவன்
வறுமையுற்றான் என்றோ, அதுபற்றித் தலைவி பிணங்கினாள் என்றோ, மருதப்
பாடல் அமையவில்லை. தலைவனின் மகனைத் தெருவில் கண்ட போது,
பரத்தையர்
அவனுக்குத் தொடியும் மோதிரமும் அணிந்து அனுப்பினர் எனக்
கலிப்பாடல்கள்
(82,84) உரைக்கின்றன. இதனால் பரத்தையர் பொருட்
பெண்டிர் அல்லர் எனத் துணியலாம் என்பர் (290). இச்செய்திகள் பரத்தையர்
எத்தன்மையர் என அறியத் துணை செய்கின்றன.
உள்ளுறை
உள்ளுறையின் சிறப்பையும் இயல்பையும் சுருங்கச் சொல்லி விளங்க
வைத்துள்ளார். உள்ளுறை உடைய பாட்டு மலரணிந்த கூந்தல் போன்றது.
இலக்கிய அழகை மிகுப்பது. இயற்கை வனப்பும் உவமைத் தன்மையும்
உள்ளப் பதிவும் நாகரிகப் பண்பும் புலமைக் கூர்மையும் உள்ளுறையால்
விளங்கும். (363)
புலவரின் தனித் தன்மை
அகம் பாடிய சங்கப் புலவர்களின் பாடலியல்பு கூறுங்காலை, அவர்தம்
தனித்தன்மை ஆங்காங்கே புலப்படுத்தப் பெறுகின்றது. நல்லந்துவனாரின்
கலிப்பாடல்கள் முதல், உரி, கரு என்ற மூன்றானும் நெய்தல்கள். சங்கப்
புலவர் எவரிடமும் காணப் பெறாத ஒரு தனியருமை அந்துவனாருக்கு உண்டு.
அவர் ஒருவரே அகத்திணையுள் ஒரு பிரிவான பெருந்திணைக்கு இலக்கியம்
செய்தவர் என்னும் புதுச் செய்தியைப் புலப்படுத்தியுள்ளார் (405). அன்பும்
நாணமும் ஐந்திணையாம் என்றும் அன்பும் நாணமின்மையும்