தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


விரட்டப்பட்ட மான்

காதலர் உறவு ஊரில் தெரிந்த பின்னும் மணம் செய்து கொள்ள அவசரப்படாத காதலன் தன் காதலியைச் சந்திக்கிறான். அவளிடம் காதல் பேச்சுகள் பேசுகிறான். தனது தவறையும், இலைமறை காயாக ஒப்புக் கொள்ளுகிறான். திருமண ஏற்பாடுகளை உடனே செய்யும்படியாக அவனைத் தூண்ட வேண்டும் என்று நினைத்த அவள் அவனைக் கடிந்து கொள்கிறாள். “உன்னால் சந்தியில் என் பெயர் இழுபட்டது. என் உறவினர்களைப் பகைத்துக் கொண்டேன். விரட்டப்பட்ட மான் போலாகி விட்டேன்” என்று கூறுகிறாள். இச் சுடு சொற்களால் அவன் திருமணத்திற்கு முனைவான் என்பது அவள் கருத்து.

ஆண்:

கட்டக் கருத்தப்புள்ள
காலுத் தண்ட போட்ட புள்ள
உதடு செவத்த புள்ள
மெலியுதனே ஒன்னால
நாட்டுக்கு நாடு மட்டம்
நாம ரெண்டும் ஜோடி மட்டம்
கோட்டுக்குப் போனாலுமே-நம்ம
கோடி ஜனம் கையெடுக்கும்

கிள்ளிய கொசுவத்துக்கோ
கீழ் மடியின் வெத்திலைக்கோ
அள்ளிய தேமலுக்கோ
ஆசை கொண்டேன் பெண் மயிலே!
மலையிலே மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழ தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள கொண்டயிலே
செவ்வரளிப் பூவக் கண்டேன்
வெட்டின கட்டயில
வீரியமா பூத்த பூவே
வக்கத் தெரியாம
வாட விட்டேன் தேசவழி

 
பெண்:

எலுமிச்சம் பழ மிண்ணு
எடுத்தேன் கை நெறைய
பச்சக் குமிட்டியல்ல
பாத்தவுக சொல்லலியே
படர்ந்த நெஞ்சாம் பருமுழியாம்
பாவிக்கல்லோ ஆசை கொண்டேன்
இலந்த முள்ள தலைமுடிய
இழுபடுதேன் சந்தியில
பாத்தனய்யா உன் முகத்த
பகச்சனய்யா எஞ்சனத்த
விட்டுப் பிரிஞ்சேனய்யா
விரட்டப் பட்ட மானப்போல

வட்டார வழக்கு: முள்ள-முள்ளை.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)