தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


உன் மயக்கம்

ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும் சுவையாக இருக்கின்றன.

ஆண்:
எண்ணெய் தேய்த்தல்லோ
எனக்கு முன்னே போரபுள்ள
எண்ணெய்ப் பளபளப்பு-என்
கண்ணை மிரட்டுதடி
எண்ணெய்க்குடம் போல
எழும்பி வந்த மேகம் போல
தண்ணிக்குடம் போல
தளும்புதடி என் மனசு
பெண்:
உங்க மேனிக்குள்ள
ஊதாக் கலர் சட்டைக்குள்ள
தோளிலிடும் லேஞ்சுக்குள்ள
தோகைமயில் ஆசை கொண்டேன்
ஆண்:
வாழைக் கொடிக்காலே
வட கொடிக்கால் வெத்திலையே
போட்டா செவக்குதில்ல
பெண்மயிலே உன் மயக்கம்
பெண்:
சத்தனக்கும்பாவில
சாதம் போட்டு உண்கையில
உங்களை நினைக்கையிலே
உண்ணுறது சாதமில்லை.

குறிப்பு : வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும் செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது பற்றிய நம்பிக்கை முன்னரே குறிப்பிடப்பட்டது.

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)