தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 10 -

நிறுவுவதற்காக ஒரு போலி முயற்சியிலும் ஈடுபட்டார். வட மொழி எழுத்துகளையும் தமிழ் எழுத்துகளையும் ஒப்பிட்டார். இரண்டுக்கும் பொதுவான எழுத்துகள் இத்தனை என்று கணக்கிட்டு, அவை எல்லாம் வடமொழிக்கே சொந்தமானவை என்று கிறுக்கான முடிவு செய்துவிட்டார். பிறகு வடமொழியில் இல்லாத எழுத்துகளாகத் தமிழில் எத்தனை சிறப்பு எழுத்துகள் உள்ளன என்று கணக்கிட்டார். எ ஒ என்ற இரண்டு உயிர்க் குறில் எழுத்துகளும் ற ன ழ என்ற மூன்று மெய்யெழுத்துகளும் ஆகிய ஐந்துமே வடமொழியில் இல்லாதவை; தமிழில் மட்டும் இருப்பவை. இந்த ஐந்து எழுத்துக்கள்மட்டும் இருப்பதால் தமிழ் ஒரு மொழி என்று பெருமை கொண்டாட முடியுமா என்று ஒரு சூத்திரம் இயற்றிக் கிண்டல் செய்தார்.

            ஐந்து எழுத்தால்ஒரு படையும் ஆம்என்று
           அறையவும் நாணுவர் அறிவுடை யோரே

என்று எள்ளினார். தமிழுக்கு அவ்வாறு பெருமை கூறிப் பேசவும் அறிவுடையவர்கள் நாணம் அடைவார்கள் என்றார். இது அந்தக் காலத்து வடமொழி அறிஞர்களின் தவறான மனப்பான்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

      சொற்களைப் பொறுத்த அளவிலும் இவ்வாறே அவர்கள் தவறாக நடந்தார்கள். தமிழ் மொழியில் நெடுங்காலமாக இருந்து வந்த அடிப்படைச் சொற்களாகிய நீர் மீன் முதலியனவும் வடமொழியின் வேர்ச்சொற்களிலிருந்தே அமைந்தவை என்று பொருத்தம் இல்லாத விளக்கங்கள் கூறினார்கள். இந்த நாட்டில் மிகப்பழங்காலம்முதல் இருந்துவந்த தமிழிலிருந்து வடமொழி பல சொற்களைக் கடன் வாங்கியிருக்கக்கூடும் என்று எண்ணிப் பார்க்கவும் மறுத்துவிட்டு, தமிழில் உள்ள பல சொற்களும் வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்ற கருத்தைப் பரப்பினார்கள். தமிழறிஞர்கள் அந்தக் கருத்துகளைக் கேட்டுத் தலைகுனிந்து நின்றார்கள். ஐரோப்பாவிலிருந்து கால்டுவெல் (Caldwell) முதலான மொழித்துறை அறிஞர்கள் வந்து, அவர்களின் கருத்துகள் உண்மை அல்ல என்று ஆங்கிலத்தில் நூல்கள் எழுதி உண்மையை வெளிப்படுத்திய பிறகே, தமிழறிஞர்களின் உள்ளத்தில் புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த நூற்றாண்டில் பர்ரோ (Burrow) முதலான ஆங்கிலேய அறிஞர்கள் மேலும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து வடமொழி அறிஞர்களின் ஒருதலைச் சார்பான கொள்கைகளைப் பொய்ப்படுத்தும் வரையில் அந்தப் பழைய போக்கு இருந்து வந்தது. முதுகுன்றம் முதலான பழைய ஊர்களின் தமிழ்ப்பெயர்களை விருத்தாசலம் முதலான வடசொற்களாக மாற்றிவிட்டுப் பிறகு, வட மொழியிலிருந்தே தமிழ்ப்பெயர்கள் வைக்கப்பட்டன என வாதாடினார்கள்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:10:18(இந்திய நேரம்)