Primary tabs
கோயில் தெய்வங்களுக்கு இருந்துவந்த தமிழ்ப் பெயர்களையும் அவ்வாறே மாற்றினார்கள். பழைய பக்திப் பாடல்களில் இருந்துவந்த தமிழ்ப் பெயர்களும் அவ்வாறு கோயில்களில் வடமொழியாக மாற்றப்பட்டன. சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆர்க்காடு என்ற ஊர்ப் பெயரை வடமொழியில் மொழிபெயர்த்தபோது, சொல்லின் சரியான பொருள் உணராமல் ஆறுகாடு என்று கருதி ஷடாரண்யம் எனத் தவறாக மொழிபெயர்த்தார்கள். அவற்றிற்கு ஏற்றபடி பிற்காலத்தில் கதைகளும் எழுதினார்கள். ஆனால், அப்படி மொழிபெயர்க்கப்பட்ட சில பெயர்கள் நிலைக்கவில்லை. பாலாற்றை க்ஷீர நதி என்றார்கள். ஆனால் மக்களிடையே வடமொழிப் பெயர் நிலைக்கவில்லை. தமிழ்ச் சொல்லே நின்றது. இவ்வாறு வீணாக வடமொழி அறிஞர்கள் ஒரு பகையுணர்ச்சிக்கு வித்திட்டார்கள்.
தனித் தமிழ் இயக்கம்
தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் கலந்ததுபோல், தமிழிலும் வடமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் மிகுதியாகக் கலக்கும் முயற்சி ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றியது. வட சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் அளவு இல்லாமல் கலப்பதால், முத்தும் பவளமும் கலந்த மாலை போல் தனி அழகு ஏற்படுகிறது என்று சொல்லி, வடமொழி படித்த அறிஞர்கள் அந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். மணிப்பிரவாள நடை என்று அதற்குப் பெயர் தந்து, அதைப் பரப்ப முயன்றார்கள். முதலில் வடமொழி படித்த சைன அறிஞர்களும், பிறகு வைணவ அறிஞர்களும் அதைக் கையாண்டார்கள். அதற்காகக் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தினார்கள். இயல்பாகவே இலக்கிய வளம் பெற்றுச் சொல்வளம் நிரம்பிப் பண்பட்ட தமிழ்மொழியில் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்புத் தந்து போற்றவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழே வீட்டில் பேசித் தமிழராகவே வாழ்ந்த வடமொழி அறிஞர்கள், தேவாரம், திருவாசகம் முதலான தமிழ் நூல்களையும் படிக்காமல் புறக்கணித்தார்கள். தமிழ்மட்டும் கற்றவர்களை மதிக்காமல் நடந்தார்கள். சோழ மன்னர்கள் மானியம் பலவும் தந்து பெருமைப்படுத்திப் போற்றிவந்த தேவாரப் பாடல்களுக்குக் கோயில்களில் சிறப்பிடம் இல்லாமல் செய்துவந்தார்கள். தமிழை நீச்சபாஷை என்று ஒதுக்கி, வடமொழிமட்டுமே தேவபாஷை என்று உயர்த்திப் பேசினார்கள். எந்த நூலிலாவது உயர்ந்த கருத்து இருந்தால், அது வடமொழியில் இன்ன நூலிலிருந்து கடன் வாங்கப்பட்டது என்று சொல்லி அதன் பெருமையைக் குறைக்க முனைந்தார்கள். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் முதலான