Primary tabs
என்றோ செய்த தவறுகளின் விளைவுகள் இவ்வாறு இன்றும் உள்ளன. அவர்களுக்கு அன்று இருந்த வடமொழியறிவுபற்றிய செருக்கே, இன்று உள்ள தனித் தமிழ் உணர்ச்சி வேகத்துக்குக் காரணமாயிற்று. இன்றும் மொழித்துறையில் இருவேறு கொள்கைகள் இருந்து எழுத்தாளர்கள் மோதிக்கொள்வதற்கு அந்தத் தவறுகள் அடிகோலிவிட்டன. இன்று செய்தியிதழ்கள், வாரஇதழ்கள், திங்கள் இதழ்கள் ஆகியவற்றில் எழுதுவோர் பலர் தனித் தமிழில் எழுதுவதில்லை. அதனால், அவற்றில் உள்ள கலப்புத் தமிழ் பிழையான தமிழ் எனப் புலவர்களால் வெறுக்கப்படுகிறது. புலவர்களின் தனித் தமிழ்நடையைக் கடுமையானது என்றும், உயிரோட்டமில்லாதது என்றும், செயற்கையானது என்றும், மற்றவர்கள் பழித்துக்குறை கூறுகிறார்கள். ஆகவே, இன்றும் பழைய பூசலின் விளைவு வேறு வடிவில் இருந்து வரக் காண்கிறோம்.
பழங்காலத்தில் இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்களிடையே கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக இருந்த மொழி வடமொழி. ஆகவே, அது காசியிலும் போற்றிக் கற்கப்பட்டது; காஞ்சியிலும் போற்றிக் கற்கப்பட்டது. காவிரிக் கரைமுதல் கங்கைக் கரை வரையில் இருந்த பலவகை அறிவு வளர்ச்சியையும் அறிஞர் பலர் வடமொழியில் எழுதி வைத்தனர். வடமொழியில் இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். வட மொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்னும் தமிழர். அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர்; திருஞான சம்பந்தரைப்பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர்; ஆழ்வார்களின் பாடல்களை ஆர்வத்துடன் போற்றியவர். பரத நாட்டியம்பற்றியும், கர்னாடக சங்கீதம்பற்றியும், சமையல் முதலியனபற்றியும் உள்ள வட மொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை. ஆகவே, தமிழ் மொழியையும், தமிழ் நூல்களையும் பிற்கால வடமொழி அறிஞர்கள் தாழ்வுபடுத்தியும், வட மொழியில் உள்ள கருத்துகள் தமிழுக்கு மாறானவை என்று தமிழறிஞர்கள் ஒதுக்கியதும் தேவையற்றவை.
தமிழ்ப் புலவர்களின் நடைக்கு வழிகாட்டியாகப் பழைய உரையாசிரியர்களின் நடை அமைந்துள்ளது. அந்த உரையாசிரியர்களின் தமிழில் - பரிமேலழகர் முதலான வடமொழி கற்ற அறிஞர்கள் எழுதிய தமிழிலும் - வட சொற்கள் மிகமிகக் குறைவு. அது தனித்தமிழ் நடையிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளது. அந்த நடையையே தமிழிலக்கியம் கற்ற புலவர்கள் போற்றிப் பின்பற்றுகிறார்கள்.