தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 98 -

இருக்கவேண்டும் என்று சிறையில் வைக்கப்பட்டாள். பிறகு அவளுடைய பண்பையும் உண்மையையும் உணர்ந்த சோழ அரசன் சிறையிலிருந்து விடுவித்தான். அந்நிலையில் அரசனிடம் மணிமேகலை கேட்ட வரம் ஒன்று, அவளுடைய உயர்வை எடுத்துக்காட்டுகிறது. அப்போது அவள் சிறைச்சாலை எல்லாம் அறச்சாலை ஆக்குமாறு அரசனைக் கேட்டுக்கொண்டாள். மகனாகிய இளவரசனை இழந்த சோழ அரசி, முதலில் மணிமேகலையிடம் சினம் கொண்டு அவளுக்குப் பல துன்பங்கள் செய்தாள். பிறகு உண்மை உணர்ந்ததும் சினம் நீங்கிய அரசி, மணிமேகலையை வணங்கலானாள். அப்போது மணிமேகலை, “நீ நாட்டு மன்னனின் தேவி; என்மேல் காதல் கொண்ட இளவரசனைப் பெற்ற தாய். ஆதலால் என்னை வணங்குவது பொருந்தாது” என்று அடக்கத்தோடு கூறினாள். மணிமேகலையின் வாயிலாகப் பல அறவுரைகளை இந்த நூலில் பெறுகிறோம். இளவரசன் கொல்லப்பட்டபோது, அரசி தன் மகனை நினைந்து அழுது புலம்பினாள். அப்போது அவளுக்கு ஆறுதல் கூற எண்ணிய மணிமேகலை, அவளுக்கு வாழ்வின் உண்மையை எடுத்துரைத்தாள். “அரசியே! நீ உடலுக்காக அழுகிறாயோ? உயிருக்காக அழுகிறாயோ? உடலுக்காக அழுகிறாய் என்றால், உன் மகனை எடுத்துச் சென்று இடுகாட்டில் இட்டவர் யார்? உயிர்க்காக அழுகிறாய் என்றால், உயிர் போய்ப் புகும் இடம் அவரவர் செய்த வினைக்கு ஏற்றவாறு அமைவது; தெரிந்து கொள்ள இயலாதது அது. உன் மகனுடைய உயிர்க்காக அன்பு செலுத்துகிறாய் என்றால், நீ எந்த உயிர்க்காகவும் பொதுவாக இரக்கம் கொள்வதே கடமை ஆகும்” என்றாள். இவ்வாறு பல இடங்களிலும் புத்தர் பெருமானின் அறவுரைகள் மணிமேகலையின் வாய்மொழியாலும் வாழ்க்கைநெறியாலும் தெளிவாகப் புலப்படுகின்றன.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:34:48(இந்திய நேரம்)