தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 99 -

6. பக்திப் பாடல்கள்
(கி. பி. 600 - 900)

பக்தி இயக்கம்

சங்க காலத்தையும் நீதிநூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இயக்கக் காலம் ஆகும். கி. பி. ஏழு எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சைவ சமயப் பெரியவர்களான நாயன்மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றிப் பக்திப் பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தம்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்த சைன சமயங்களை எதிர்த்து மக்களைத் திரட்டுவதற்குக் கலைநயத்துடன் கூடிய பக்திப் பாடல்கள் பயன்பட்டன. நாயன்மார் நால்வரும் ஆழ்வார்களில் பலரும் இசையோடு பாடல்களைப் பாடிக் கோயில்தோறும் இறைவனை வழிபட்டார்கள். இறைவன் “ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன்” என்றார் சுந்தரர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்று சம்பந்தர் போற்றப்பட்டார். “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று திருநாவுக்கரசர் சொல்லியுள்ளார்.

சைனரும் பௌத்தரும் புலனடக்கத்தையும் உண்ணாநோன்பு இன்பவெறுப்பு முதலியவற்றையும் மக்களிடையே வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.துறவறத்தையே பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியையே போற்றி, அதற்கு இசைவான ஆடல் பாடல் முதலான கலைகளைப் பாராட்டினார்கள். இல்வாழ்க்கையில் இன்பமாக வாழ்ந்தாலும் எந்தத் தொழிலைச் செய்தாலும் உள்ளத்தை இறைவனுக்கு உரியதாக வைத்து வாழ்க்கை நடத்தினால் போதும் என்றார்கள். பலவகைக் கலைகளையும் வளர்க்கும் இடமாகக் கோயில்கள் ஓங்குவதற்கு அவர்களுடைய பக்தியியக்கம் துணைசெய்தது. மக்களிடையே அவர்களின் இயக்கம் பரவுவதற்குத் தமிழ்ப் பாடல்கள் இசையோடு அமைந்து உதவி புரிந்தன.

பக்தி இயக்கத்துக்குத் தொடக்கமாக, முன்னேராக, ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாரும் திருமூலரும் இயற்றிய பாடல்கள் உதவின; ஆழ்வார்களில் பேயாழ்வார் பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் பாடிய பாசுரங்கள் அவ்வாறு உதவின.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:35:05(இந்திய நேரம்)