Primary tabs
அந்த உரைநூல்கள் - வியாக்கியானங்கள் - வழி வழியாக உயர்ந்த ஞானச் செல்வங்களாகப் போற்றப்படுகின்றன. எழுத்தெண்ணிக் காக்கப்பட்டு வருகின்றன. மூவாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்று எழுத்துக்களின் எண்ணிக்கையால் அந்த உரைநூல்களுக்குப் பெயர் அமைந்த சிறப்பு, அவை போற்றப்பட்டுவந்த பெருமையை உணர்த்தும். வைணவர்கள் தம் வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் என்றும் மறவாமல் போற்றிவரும் பாடல்கள் திருவாய்மொழிப் பாடல்கள் ஆகும். தென்கலை வைணவர்களுக்கு அவை மந்திரங்களைவிட உயர்வாக உள்ளன.
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் உயர்ந்த தத்துவஞானப் பாடல்கள் இருத்தல்போலவே, காதல் துறைகளை அமைத்துப் பாடும் பக்திப் பாடல்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட தெய்வக் காதல் துறைகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்தது தூது என்பது. நாரை, பூவை முதலிய பறவைகளைத் திருமாலிடத்துத் தூது அனுப்பிப் பாடும் பாடல்கள் உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தவை. பழங்காலத் துறைகள்மட்டும் அல்லாமல், பழங்கால இலக்கியத் தொடர்களும் திருவாய்மொழியில் சில இடங்களில் அவ்வாறே உள்ளன. ஆகவே பக்தர், ஞானிகள், புலவர்கள் அனைவரும் போற்றத்தக்கவாறு திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் சிறப்புப் பெற்று ஒளிர்கின்றன.
நம்மாழ்வார் தம்மை நாயகியாக (பக்தி கொண்ட காதலியாக)க் கற்பனை செய்து உணர்ந்து நாரை முதலிய பறவைகளைத் திருமாலிடம் தூது அனுப்புவதாகப் பாடும் பாடல்கள் பக்திச் சுவையும் இலக்கிய நயமும் நிரம்பியவை. “அழகிய சிறகுகளை உடைய நாரையே! நீயும் உன் சேவலுமாக எனக்கு உதவிசெய்யும் பொருட்டு என் தூதாக என் நாயகராகிய திருமாலிடம் சென்றால், அவர் உங்களைச் சிறைப்படுத்தி வைத்துவிட்டால், என்ன செய்வீர்களோ?”
“அன்னப் பறவைகளே! நீங்கள் எனக்காகத் திருமாலிடம் தூது செல்லமாட்டீர்களா? அறிவில்லாத என்னுடைய கொடியவினை தீராதோ என்று ஒருத்தி இப்படி அறிவெல்லாம் கலங்கி மயங்குகிறாள் என்று அவரிடம் சொல்லமாட்டீர்களா?”
“அகன்றில் பறவைகளே! காதலால் மெலிந்து வாடும் என் தன்மையைக் கண்டு இரக்கம் கொண்டு அருள் செய்யாமலிருப்பது தகாது என்று அவர் உணரவில்லையே! அவருக்கு என்ன சொல்லி நான் தூது அனுப்புவேன்? இப்படி இரக்கமில்லாமல் என்னைக் கைவிட்டால், அவரிடம் நல்ல பண்பு நிற்காது என்று ஒரு வாய்ச் சொல் சொல்லுங்கள். இந்த உதவி செய்வீர்களோ? மாட்டீர்களோ?”