தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 125 -

இருக்கும் பறவை எங்கும் பறந்துப்போய் கரை காணாமல் மறுபடியும் மறுபடியும் அந்தக் கப்பலின் பாய்மரத்தின்மேலே வந்திருப்பதுபோல், நான் உன்னையே நாடுகிறேன். கதிரவனுடைய வெயில் கொதித்துத் தன்னை வாட்டினாலும் அந்தக் கதிரவனை நோக்கியே மலரும் தாமரை போன்றவன் நான். மழை பெய்யாமல் நெடுங்காலம் புறக்கணித்தாலும் பயிர்கள் மறுபடியும் வானத்து மேகங்களையே பார்த்திருப்பதுபோல் நான் உன் அருளையே பார்த்திருக்கிறேன்.” இவ்வாறு அழகிய உவமைகளால் தம் பக்தியின் சிறப்பு விளங்கச் செய்திருக்கிறார்.

இராம அவதாரத்தில் ஈடுபாடு மிகுந்த குலசேகர ஆழ்வார் ஒரு பதிகத்தில் இராமாயணக் கதைச் சுருக்கத்தைப் பாடியுள்ளார். கிருஷ்ண அவதாரத்தில் ஈடுபாடு மிகுந்தவராகிய பெரியாழ்வாரும் இராமனைப் பல பாடல்களில் பாடியுள்ளார். இலங்கைக்குத் தூது சென்ற அனுமன், இராமன் கூறிய அடையாளங்களைச் சீதைக்குக் கூறுவதாகவும், கணையாழியைக் கொடுத்து மகிழ்வதாகவும் பெரியாழ்வார் ஒரு பத்துப் பாடல் பாடியுள்ளார். கைகேயி விரும்பியவாறு இராமன் மரவுரி உடுத்துக் காட்டுக்குச் சென்ற துன்பத்தை நினைத்து உருகித் தசரதன் புலம்புவதாகக் குலசேகர ஆழ்வார் நெஞ்சை நெகிழ்விக்கும் பாடல்கள் பத்துப் பாடியுள்ளார். மற்ற ஆழ்வார்களும் இராமனின் அருஞ்செயல்களையும் பேரருளையும வியந்து ஏத்தியுள்ளார்கள். இவர்கள் ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் பாடிய இந்தப் பக்திப் பாடல்கள் பிறகு வந்த கம்பரின் காப்பியத்துக்கு நன்கு வழிவகுத்தன. வால்மீகியின் இராமாணத்தைத் தழுவியே கம்பர் தம் நூலை இயற்றிய போதிலும், அதில் உள்ள பக்திச்சுவைக்கு ஆழ்வாரின் பாடல்களே அடிப்படையாக அமைந்தன என்று கூறுவது பொருந்தும்.

திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகியோரும் திருமாலிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்துப் பாடியவர்கள்.

நம்மாழ்வார்

ஆழ்வார்களுள் சிறப்பிடம் பெற்றவர் நம்மாழ்வார். அவரைப் பாடிப் போற்றுவதே கடமையாகக் கொண்டவர் மதுரகவியாழ்வார். நம்மாழ்வார் பாடிய நான்கு நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன. இவை நான்கும் நான்கு வேதங்களின் சாரம் என்று சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஒப்பற்ற சிறப்புப் பெற்றது திருவாய்மொழி. பக்தியுணர்வுக்குமட்டும் அல்லாமல் தெளிந்த மெய்யுணர்வுக்கும் திருவாய்மொழி களஞ்சியமாக உள்ளது. வைணவ சமயத்தைச் சார்ந்த அறிஞர்கள் பலர் இந்நூலுக்கு அரிய பெரிய விளக்கங்கள் எழுதியுள்ளனர்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:42:23(இந்திய நேரம்)