Primary tabs
தோன்றியது. அவர் யார் என்பது இன்று அறிய முடியவில்லை. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நந்திவர்மன் என்ற அரசன்மேல் அவ்வாறு அமைந்த நந்திக்கலம்பகம் என்ற நூலே இவ்வகையில் கிடைக்கும் பழைய நூல் ஆகும். நந்திக்கலம்பகத்தையும் அதுபோன்ற சில கலம்பக நூல்களையும் கண்ட இலக்கணப் புலவர்கள், கலம்பகம் என்ற இலக்கிய வகை இவ்வாறு அமையவேண்டும் என்று அதற்கு இலக்கணம் எழுதியுள்ளனர். இன்ன இன்ன செய்யுள்வகைகள் கொண்டு, இன்ன இன்ன பொருள்வகைகள் (துறைகள்) அமைந்து வரவேண்டும் என்று எழுதினார்கள். பதினெட்டு உறுப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். தெய்வங்களைப்பற்றிப் பாடுவது நூறு செய்யுள் உடையதாகவும், முனிவர்களைப்பற்றியது தொண்ணூற்றைந்து உடையதாகவும், அரசர்களைப்பற்றியது தொண்ணூறு உடையதாகவும், அமைச்சர்களைப்பற்றியது எழுபது கொண்டதாகவும், வணிகர்களைப்பற்றியது ஐம்பது கொண்டதாகவும், வேளாளரைத் தலைவராகக் கொண்டு பாடியது முப்பது செய்யுள் உடையதாகவும் இருக்கவேண்டும் என்று சாதிபற்றிய இலக்கணம் எழுதினர். இவ்வாறு இலக்கிய நூல்களின் அமைப்புக்கு விதிகள் வகுத்து ஒழுங்கு செய்துவிடலாம் என்று இலக்கணக்காரர் எண்ணியது வியப்பாகவே உள்ளது. படைப்பிலக்கியத்தை இவ்வாறு கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்பாட்டுக்கு அடங்குமானால் அது படைப்பிலக்கியமாக இருக்க முடியாது. எங்கே உரிமை இல்லையோ அங்கே கலையின் பிறப்பு இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இத்தனை இத்தனை செய்யுள் என்று சாதிக்கு எற்றபடி வகுத்தது முற்றிலும் பொருந்தாது. பதினெட்டு உறுப்புகள், இத்தனை செய்யுள் என்ற விதிகளைப் பிற்காலத்தில் கலம்பகம் இயற்றியவர்கள் பின்பற்றவில்லை. தம்தம் கற்பனையின் வளத்துக்கு ஏற்றவாறு கூட்டியும் குறைத்தும் மாற்றியும் பாடினார்கள். இலக்கண நூல்களில் கூறப்படாத பிச்சியார், கொற்றியார், இடைச்சியர் வலைச்சியர், கீரையார், மோகினியார் முதலிய பெண்களின் மொழிகளாகவும் செய்யுள்கள் இயற்றிக் கலம்பகத்தில் இடம் பெறச் செய்தார்கள். திருக்கலம்பகம் என்ற பழைய நூல் 110 செய்யுள் உடையது. ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் 49 செய்யுள் கொண்டது. இரட்டைப் புலவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலிய பெரும் புலவர்களும் கலம்பகம் இயற்றியுள்ளனர். பெரும்பாலான கலம்பக நூல்கள், சில தலங்களில் கோயில்கொண்டுள்ள தெய்வங்களைப் புகழ்ந்து பாடியவைகளே. ஒவ்வொரு செய்யுளிலும் வெவ்வேறு பொருள் அமைந்திருந்தாலும், ஏதேனும் ஒரு தொடர்பாக அந்த ஊரும் தெய்வமும் புகழப்பட்டிருக்கும். ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லோ சீரோ அசையோ அடுத்த செய்யுளின் தொடக்கமாக