தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 137 -

அமையும் அந்தாதி முறையில் நூல் முழுவதும் அமையும். ஆகவே பல வண்ண மணிகளை ஒரு நூல் கொண்டு அழகாகக் கோத்ததுபோல் விளங்குவது கலம்பகம். கலம்பகத்தின் தலைவனுடைய பெரும் புகழுமே கோப்பதற்கு உதவியான அந்த நூல் எனலாம்.

இடைக்காலத்தில் செய்யுள் இயற்றுவோர், அவற்றில் யமகம் முதலான சொல்லணிகளை அமைப்பதை ஒரு பெரிய திறமையாகக் கருதியிருந்தார்கள். கலம்பக நூல்களில் அப்படிப்பட்ட சொல் வித்தைகளைக் காட்டுவதில் புலவர்கள் போட்டியிடுகிறார்கள். அவற்றில் உண்மையான பாட்டுக்கு உரிய கலைச்சிறப்பு இல்லை என்பதை இக்காலத்தார் உணர்ந்தமையால், யமகச் செய்யுள்களை இன்று போற்றுவதில்லை.

கலம்பகம் பாடுவது சென்ற நூற்றாண்டுமுதல் குறைந்து விட்டது. பழைய கலம்பகங்களுக்குள்ளும் நந்திக் கலம்பகம் ஒன்றையே அதன் கவிதை வளம்பற்றி இன்னும் பலரும் பாராட்டிக் கற்று வருகிறார்கள். மற்றக் கலம்பங்களை அந்தந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் சமயப்பற்றுக் கொண்டு போற்றி வருகின்றார்கள். சென்ற நூற்றாண்டில் மேல்நாட்டுக் கல்வியில் தேர்ந்த பூண்டி அரங்கநாத முதலியார் என்பவர் கலம்பகத்தில் ஈடுபாடு கொண்டு காஞ்சிபுரத்தைப் போற்றிக் கச்சிக் கலம்பகம் இயற்றினார்.

திருப்பள்ளியெழுச்சி

தமிழ்நாட்டில் பழங்காலத்தில் அரசர்களும் மற்றத் தலைவர்களும் வைகறையில் உறக்கம் விட்டு எழுமுன் அவர்களின் செவியில் இனிமையான இசை கேட்பது நல்லது என்று ஒரு வழக்கம் ஏற்படுத்தியிருந்தார்கள். இசைக்கலையில் வல்ல பாணர்கள் வைகறையில் அரண்மனைக்கும் பிற இடங்களுக்கும் சென்று அவர்கள் உறக்கம்விட்டு எழுமாறு இனிய இசை பாடுவார்கள் (இன்றும் சில மாதங்களில் அவ்வாறு வீடுதோறும் வைகறையில் சிலர் பாடிச் செல்லும் வழக்கம் தமிழ் நாட்டில் உள்ளது). நாட்டுப் பாடல்கள் பல அந்தக் காலத்தில் துயிலெழுப்பும் பாடல்களாக இருந்திருக்கின்றன. அவற்றை ஒட்டிப் புலவர்களும் பாடியிருக்கிறார்கள். சங்க காலத்தில் அந்தப் பாடல் மரபு ‘துயிலெடைநிலை’ என்று கூறப்பட்டது. இடைக்காலத்தில் - ஆழ்வார் நாயன்மார்களின் பக்தியியக்கத்தின்போது-அது திருப்பள்ளியெழுச்சி என்ற பெயரால் வழங்கியது. நாயன்மார்களில் மாணிக்கவாசகரும் ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் இன்றுவரையில் கோயில்களில் வைகறையில் பூபாள ராகத்தில் ஓதப்பட்டு வருகின்றன. மாணிக்கவாசகர் சிவபெருமானைத் துயிலெழுப்புவதாகவும்,




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:45:46(இந்திய நேரம்)