தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 144 -

தொண்டுகள் செய்கிறார்கள். ஏழு வாயிலும் கடந்து சிவன் வெளியே வருகிறான். முருகன் மயில் மீது ஏறி முன்னே செல்ல, இந்திரன் அயிராவதத்தின்மேல் அமர்ந்து பின்னே வருகிறான். அன்னத்தின்மேல் அமர்ந்த பிரமன் வலப் பக்கத்திலும், கருடன்மீது அமர்ந்த திருமால் இடப்பக்கத்திலும் செல்கிறார்கள். காமனுடைய படை முன்செல்கிறது. விநாயகர் மெல்ல நடக்கிறார். மற்றத் தேவகணங்களும் சூழ்ந்துவருகிறார்கள். பலவகை இசைக்கருவிகள் ஒலிக்கின்றன. உலா வரும் தெருக்களில் மங்கையர் பலர் தெய்வத்தின் அழகைக் கண்டு களிக்கின்றனர். அவர்களுள் ஏழு மங்கையர் இறைவனைப் பார்த்துக் காதல் கொள்ளும் நிலையும் அவர்களின் ஏழுவகைப் பருவ வேறுபாட்டுக்கு ஏற்ப எழுவகை மனநிலையும் விளக்கப்படுகின்றன. ஐந்து வயதுக்குமேல் ஏழு வயதுவரை உள்ள பேதைப் பருவத்துப் பெண், காதல் என்பது இன்னது என்று அறியாதவள். அவளுடைய உள்ளத்திலும் ஒருவகை மாறுதல் ஏற்படுகிறது; அவளும் இறைவனுடைய அன்புக்காக ஏங்குகிறள். ஏழுமுதல் பதினொரு வயதுக்கு உரிய பெதும்பைப் பருவத்துப்பெண், காதலைப்பற்றிய அறிவும் அறியாமையும் கலந்த நெஞ்சோடு வாடுகிறாள். பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது உள்ள மங்கைப் பருவத்தாள், இறைவனைக் கண்டு மயங்குகிறாள். பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையில் உள்ள மடந்தைப் பருவத்தாள், தான் உற்ற காதலைத் தோழியரிடம் சொல்லிப் புலம்புகிறாள். இருபதுமுதல் இருபத்தைந்து வயதுவரையில் ஆகிய அரிவைப் பருவத்தை உடையவள், காதலால் வாடித் துயருறுகிறாள். இருபத்தாறு முதல் முப்பத்தொன்று வரையில் வயது உள்ள தெரிவைப் பருவத்திற்கு உரியவள் காதலால் சோர்வுற்று ஏங்குகிறாள். முப்பத்திரண்டுக்குமேல் நாற்பதுக்கு உட்பட்ட பேரிளம்பெண் காதலால் உள்ளமும் உடம்பும் வாடி வருந்துகிறாள். இவ்வாறு ஏழு பருவமங்கையரின் காதல் நிலைகளைக் கூறும்போதும், அந்தந்தப் பருவங்களுக்கு ஏற்றபடி அவர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுகளும், பருவங்களுக்கு எற்ற அளவில் அவர்கள் உணரும் காதல் அனுபவங்களும், அவர்களின் உள்ளத்து உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் முறைகளும் வெவ்வேறாக விளக்கப்படுகின்றன. இவ்வாறு பலருடைய நெஞ்சங்களையும் கவரும் ஒப்பற்ற அழகனாய்த் தலைவன் உலா வருவதாகப் பாடுவதே உலா நூலின் மரபு ஆகும்.

ஞான உலா பாடிய சேரமான் பெருமாள் நாயனார், திருவாரூர் முன்மணிக்கோவை, திருவண்ணத்தந்தாதி, திருவந்தாதி முதலிய வேறு நூல்களும் பாடியுள்ளார். மூன்று வேறு வகையான மணிகளை மாறிமாறித் தொடுத்த மாலைபோல், வெவ்வேறான மூவகைச் செய்யுள் வகைகள் மாறி மாறி வர, முப்பது பாட்டுகள் கொண்டது மும்மணிக்கோவை இதுவும் புதிய




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:47:45(இந்திய நேரம்)