தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 145 -

அமைப்பாகும். ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக வருமாறு அந்தாதி முறையில் பாடும் வழக்கம் சங்க காலத்தில் பதிற்றுப்பத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது. ஆயினும் சேரமான் பெருமாள் நாயனாரின் நூல்களும் நந்திக்கலம்பகமும் அந்த அந்தாதி முறைக்கு நன்கு வழி வகுத்தன எனலாம்.

உலா இலக்கிய வகையில் ஒரு நூல் இயற்றப்பட்ட பிறகு, அதன் அமைப்பையே இலக்கணமாகக் கொண்டு பின்வந்த புலவர்கள் உலா நூல்கள் இயற்றினார்கள். தலைவனுடைய ஊர் பேர் சூழ்ந்து வருவோர் முதலியன வேறுபடலாம். ஆனால் மற்ற வருணனைகளின் தன்மைகள் ஒவ்வொரு நூலிலும் அவ்வாறே இருக்கும். புலவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு. ஏழு பருவ மங்கையர்களின் காட்சியும் உணர்ச்சியும் உரையாடலும் வெவ்வேறாக அமைக்கப்படும்; உவமைகள் பல புதுமைகளோடும் கூறப்படும். இவ்வாறு இயற்றும் புலவர்களின் திறனுக்குத் தக்கவாறு சிலபல நயங்களும் சிறப்புக்களும் வெவ்வேறாக அமைந்தபோலும், ஒன்றைப்போலவே மற்றொன்று இயற்றப்படும் காரணத்தால், இலக்கியப் புதுமை காண்பது அரிதாயிற்று. ஆகவே, பல உலாக்களில் உண்மையான இலக்கியப் படைப்புக் குறைந்து, செய்யுளியற்றும் திறமையே மிகுந்து காணப்படுகிறது. கவிதைச் சிறப்புக் குன்றி, செய்யுள் புனைவே மேலோங்கி நிற்கிறது.

திருக்கைலாய ஞான உலாவிற்கு அடுத்து இப்போது கிடைக்கக்கூடியனவாக உள்ள உலா நூல்கள் பதினொன்றாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர்மேல் நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலாநூல்களும் ஆகும். தெய்வத்துக்கு உரிய சிறப்பை அரசர்களுக்கும் கூறும் வழக்கம் நிலவிய காரணத்தால் - அரசர்களைத்திருமாலின் பிரதிநிதிகளாகக் கருதும் மரபால் - அரசர்களுக்கு உலா நூல் பாடுவது வழக்கமாயிற்று. ஒட்டக்கூத்தர் பாடிய மூன்று உலாக்களும் அவ்வாறு ஏற்பட்டவைகளே. உவமைச் சிறப்புகளும் இலக்கியங்களும் ஆங்காங்கே காணப்பட்டாலும், அவை கவிதை வளம் குறைந்தனவாக இருப்பதால், இன்று அவ்வளவாகப் போற்றிப் படிக்கப்படுவதில்லை. திருவாரூர், திருப்பூவணம், மதுரை, திருவானைக்கா, காஞ்சிபுரம், திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம் முதலான தலங்களின் தெய்வங்களுக்கும் உலா நூல்கள் இயற்றப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் இவ்வாறு உலாப் பாடும் வழக்கம் புலவர்களிடையே மிகுந்திருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட உலாக்களிலும் வழக்கம்போல் ஏழு பருவ மங்கையர் கண்டு காதல் கொண்டதாகப் பாடும் பழைய மரபு அப்படியே பின்பற்றப்பட்டது. மற்ற வருணனைகளும் ஏறக்குறைய அவ்வாறே பின்பற்றப்பட்டன. அதனால் அவற்றின் இலக்கியச்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:48:02(இந்திய நேரம்)