தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 155 -

இலக்கியச் சுவை மிகுந்திருப்பதாலும், சைனர்கள்மட்டும் அல்லாமல் மற்றச் சமயத்தைச் சார்ந்தவர்களும் அந்தக்காலத்தில் விரும்பிப் படித்துவந்தனர். சேக்கிழார் என்னும் சைவசமயச் சான்றோர் ஒருவர் அமைச்சராக விளங்கிய காலத்தில், சைவனாகிய சோழ அரசன் இந்தக் காப்பியத்தை விரும்பிப் படித்து வந்ததாகக் கதை கூறுகிறது.  சங்கநூல்கள் சிலவற்றிற்கு உரை எழுதிய சிறந்த உரையாசிரியர் எனப்புகழ்பெற்ற நச்சினார்க்கினியர் சைவர். அவர் இந்தச் சைன காப்பியத்திற்கும் உரை எழுதியுள்ளமை இந்த நூலின் இலக்கியச் சிறப்பை விளக்கும் சான்றாக உள்ளது.

இவர் சைன சமயத் துறவியாக இருந்தும், சீவகன் எட்டுப் பெண்களிடம் கொண்ட காதலைப்பற்றி விளக்கும் வருணனைகளைக் கண்டு இவருடைய துறவுநிலைபற்றியே சிலர் ஐயுற்றதாகவும், தம் துறவறத்தின் தூய்மையை நிலைநாட்டுவதற்காகப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி அந்தச் சோதனையில் பழுதின்றி விளங்கியதாகவும் ஒரு கதை வழங்குகிறது.

இந்த நூல் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது என்பதை உணர்த்தும் கதையும் ஒன்று உண்டு. இராமாயணம் பாடிய கம்பர் என்னும் பெரும் புலவர், இந்தக் காப்பியத்திலிருந்து ஓர் அகப்பை முகந்துகொண்டதாகக் கூறினார் என்று அந்தக் கதை சொல்லும். பிறகு வந்த புலவர்கள் சில இடங்களில் இந்தக் காப்பியத்தைப் பின்பற்றிப் பாடியுள்ளார் என்பதை விளக்கும் சான்றுகள் உள்ளன. நாடு நகரம் முதலியவற்றை வருணிக்கும் முறையிலும், ஐந்திணையாகப் பகுக்கப்படும் நிலங்களின் இயற்கையழகுகளை விளக்கும் முறையிலும், இசை முதலிய கலைகளை விளக்கும் முறையிலும், இந்தக் காப்பியம் சிறந்து விளங்குகிறது. முதலில் உள்ள பல பகுதிகளில் காதல்சுவை மேலோங்கி நின்றபோதிலும், எண்வகைச் சுவையும் இக்காப்பியத்தில் நிரம்பியுள்ளன எனலாம்.

சீவகனின் தந்தை அமைச்சனின் சூழ்ச்சிக்கு இரையானபோது, நிறைந்த கருப்பவதியாக இருந்த அவனுடைய தாய், நகருக்கு வெளியே சுடுகாட்டில் சீவகனாகிய குழந்தையைப் பெற்றாள். அரண்மனையில் பெரிய ஆடம்பரமான விழாக்களுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவனாகப் பிறந்திருக்கவேண்டிய அரச குடும்பத்துக் குழந்தை, இவ்வாறு யாரும் துணை இல்லாமல் திக்கற்றவனாய்ச் சுடுகாட்டில் பிறக்க நேர்ந்ததை நினைந்து தாய் புலம்பினாள்

வெவ்வாய் ஓரி முழவாக
விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கின்
நிழல்போல் நுடங்கிப் பேயாட



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:50:50(இந்திய நேரம்)