Primary tabs
[நரியின் குரலே முழவு என்னும் வாத்தியமாக, செத்தவர்களின் பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கலவிளக்கு ஆக, சுடுகாடாகிய கலையரங்கில் பேய்கள் நிழல்போல் கூத்தாட, ஆந்தைகள் எல்லாப் பக்கங்களிலும் கத்தும் குரலே பலரும் பாடிப் பாராட்டுதல் போல் ஆக இந்த நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே! அரசே! இதுவோ அரசர்க்குப் பொருத்தம்?]
இவ்வாறு இந்தக் காவியம் பலவகைச் சுவையும் நிரம்பிய வளமான இலக்கியமாக உள்ளது.
சூளாமணி
சீவகசிந்தாமணிக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் சைனகாப்பியம், தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி. இதுவும் விருத்தப்பாவால் இயற்றப்பட்டது. 2330 செய்யுள் உடையது. ஸ்ரீபுராணம் என்னும் வடமொழிச் சைனநூல் உள்ள திவிட்டன் விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம் இது. பலவகை நிலங்களின் வளங்களும், நாடுநகரச் சிறப்புகளும் தமிழ் மரபின்படி இங்கே அழகாக வருணிக்கப்பட்டுள்ளன. சிந்தாமணி போலவே இந்த நூலின் முடிவிலும் துறவும் முத்தியும் விளக்கப்படுகின்றன. செய்யுள்கள் எல்லாம் இனிய ஓசைநயம் வாய்ந்தவை; இயல்பான ஓட்டம் உடையவை; இவற்றின் தமிழினிமைக்காக இவற்றைப் பலரும் படித்துப் பாராட்டுவது வழக்கம். இயற்கையழகை விளக்கிப் பாடும் பாட்டுகள் சிறந்த சொல்லோவியங்களாக உள்ளன. விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றியபோதிலும், சில இடங்களில் அவரையும் விஞ்சிவிட்டார் என்று கூறலாம்.
வளையாபதி
வளையாபதி என்ற சைன காப்பியம் இப்போது கிடைக்கவில்லை. உரையாசிரியர் பலர் இதன் பாட்டுகளை மேற்கோள்களாகக் காட்டுவதால், அவர்களின் காலத்தில் இந்த நூல் புகழுடன் விளங்கியது என்பதை உணரலாம். இப்போது 70 செய்யுள்கள் மட்டுமே கிடைக்கின்றன. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நூல் இருந்தது. சிறந்த பதிப்பாசிரியராகிய டாக்டர் சாமிநாத ஐயர், ஒரு மடத்தில் இந்த நூலைக் கண்டதாகவும், அடுத்தபடி தாம் தேடிச் சென்ற காலத்தில் அது கிடைக்காமற் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பழைய தமிழ் நூல்கள் பல சென்ற