தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 157 -

நூற்றாண்டுவரையிலும் இருந்து, ஆங்கிலக் கல்விக்குச் சிறப்பு ஏற்பட்டுத் தமிழ்க் கல்வி மங்கியபோது அந்நூல்கள் மறைந்து போயின என்பதை அறிந்து வருந்த வேண்டியுள்ளது. இந்த நூலும் அழகான விருத்தங்களால் இயற்றப்பட்டது என்பதை இப்போது கிடைத்துள்ள எழுபது செய்யுள்களும் புலப்படுத்துகின்றன.

குண்டலகேசி முதலியன

சைன சமய நூல்களைப் போலவே, பௌத்த சமய நூலாகிய குண்டலகேசியும் நிலையாமையை வற்புறுத்திக் கூறுகிறது. உடம்பின் நிலையாமைபற்றிய குண்டலகேசிப் பாட்டு ஒன்று இங்குக் கருதத்தக்கது. ஒருவர் இறந்துவிட்டால் உறவினரும் நண்பரும் கூடி அழுவது அறியாமை என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார். “பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. குழந்தைப் பருவம் செத்துக் காளைப்பருவம் ஏற்படுகிறது, காளைப்பருவம் செத்துக் காதலுக்கு உரிய இளமைப்பருவம் பிறக்கிறது. அதுவும் மாறி முதுமை உண்டாகிறது. இவ்வாறு ஒரு நிலை செத்து அடுத்த நிலை ஏற்படுவதால், நாம் நாள்தோறும் செத்துக்கொண்டிருக்கிறோமே! நமக்காகவே நாம் அழ வேண்டியிருக்கிறதே! அவ்வாறு அழாதது ஏனோ?” என்கிறார்.

பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும
காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ.

பௌத்த சமயக் காப்பியமாகிய குண்டலகேசி என்பது இப்போது முழுமையாகக் கிடைக்கவில்லை. அது ஒரு காலத்தில் புகழுடன் விளங்கியது. அதனால்தான் பழைய உரையாசிரியர் பலர் அதன் செய்யுள்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அது கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது எனலாம். குண்டலகேசி என்னும் பெயர்கொண்ட வணிகப்பெண்ணின் கதையை விளக்கும் காப்பியம் அது. அவள் சைன சமயத்தில் பிறந்து வளர்ந்தவள். தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்று ஒழித்துப் பிறகு பௌத்தத் துறவி ஒருவரிடம் உபதேசம் பெற்றுச் சைனத்தை எதிர்த்துப் பௌத்த சமயத் தொண்டு செய்து உயர்நிலை பெற்றாள். அந்த நூலை இயற்றியவர் நாதகுத்தனார் என்னும் பௌத்தர். சைன சமயக் கொள்கைகளை




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:51:23(இந்திய நேரம்)