Primary tabs
ஏற்றபடி பாட்டின் எண்ணிக்கையும் அமையவேண்டும் என்று கூறுகிறது. உயர்ந்த சாதித் தலைவனாக இருந்தால் செய்யுள்களின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்கவேண்டும் என்றும், சாதி தாழ்வானால் செய்யுள்களும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் இந்த இலக்கணம் கூறுவது விந்தையாக இருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்குச் சிறிதும் பொருந்தாத இந்த இலக்கணம் எப்படித் தமிழில் புகுந்ததோ தெரியவில்லை. இது முற்றிலும் வேண்டாதது; உண்மையான இலக்கிய வளர்ச்சிக்கு இடையூறானது. பன்னிருபாட்டியல் முதலான வேறு சில பாட்டியல் நூல்களும் தோன்றின. ஆனால் இன்று அவை போற்றுவார் இல்லாமல் புறக்கணிக்கப்படுகின்றன என்பது மகிழ்வதற்கு உரிய நிலையாகும்.
தண்டியலங்காரம் என்பது வடமொழியில் இயற்றப்பட்ட காவ்யாதர்சம் என்னும் அலங்கார நூலை ஒட்டித் தமிழில் இயற்றப்பட்டது. காவ்யாதர்சம் இயற்றிய ஆசிரியர் தண்டியின் பெயரையே இவரும் பூண்டார். இருவரும் தமிழ்நாட்டினரே. வடமொழி நூலில் கூறப்பட்ட கௌடமார்க்கம் வைதர்ப்ப மார்க்கம்பற்றிய குறிப்புகள் தமிழ் நூலிலும் உள்ளன. காப்பிய இலக்கணம் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. உவமை முதலான அலங்காரங்களும் அவற்றின் வகைகளும் விரிவாகக் கூறப்படுகின்றன. யமகம், திரிபு முதலான சொல்லணிகள் விளக்கப்படுகின்றன. சித்திரகவிகளும் கூறப்பட்டுள்ளன. சொல்லலங்காரம்பற்றிய விளக்கங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு வேண்டாதவை என்று இன்று உணரப்பட்டுக் கற்றறிந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டன. படைப்புத் திறன் பெற்ற உண்மைக் கவிஞர்கள் அவற்றைப் போற்றவில்லை என்பதைத் தமிழிலக்கியம் தெரிவிக்கிறது.
எந்தக் கவிதைகளிலும் சொற்களைமட்டும் வைத்து விளையாடும் விளையாட்டுக்கு இடம் இல்லை; உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் அழகான வடிவம் தருவதே கவிதையின் நோக்கம். அவ்வாறு உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் வடிவம் தரும்போது, முயற்சி இல்லாமல் இயல்பாகவே சொற்களின் விளையாட்டு அமைந்துவிடுவதும் உண்டு. கவிதையின் ஒலிநயத்திற்கு உட்பட்டுத் தாமே வந்து அமையும் சொற்களால் ஆகும் அழகு அது. பெரிய கவிஞர்களின் பாடல்களில் அப்படி இயல்பாக வந்து அமைந்த சொல்லலங்காரங்கள் உண்டு; ஆனால் அவை எங்கோ ஒவ்வோர் இடத்தில் அருகியே காணப்படும். சங்க இலக்கியத்தில் உள்ள பாட்டுகளில் சொல்லலங்காரம் குறைவு. உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் சொல்வடிவம் தருவதே சங்கப் புலவர்களின் கலைமுயற்சி ஆகும். அத்தகைய பாட்டுகளிலும் ஒரு சில அடிகளில்மட்டும் இயல்பாக வந்து அமைந்த