தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 185 -

சொல்லழகுகள் காணப்படுகின்றன. வேண்டுமென்றே வலிய முயன்று தேடி அமைந்த சொல்லலங்காரங்கள் என்று அவற்றைச் சொல்ல முடியாது.

இதுஎன் பாவைக் கினியநன் பாவை
இதுஎன் பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுஎன் பூவைக் கினிய சொற் பூவை. - (ஐங்குறுநூறு)
சேர்ந்துடன் செறிந்த குறங்கின் குறங்கென
மால்வரை ஒழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி. - (சிறுபாணாற்றுப்படை)

இவ்வாறு சிலசொற்கள் திரும்பவந்து அழகுபெறும் இடங்கள் சங்க இலக்கியத்தில் மிகமிகக் குறைவே. அவைகளும் அலங்காரத்திற்காக வலிந்து அமைக்கப்பட்டவை அல்ல.

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. - (குறுந்தொகை)
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லெனோ உலகத்துப் பண்பே.-(குறுந்தொகை)

இவ்வாறு சொற்கள் மடக்கி வரும் ஒரு சில பாடல்களிலும் அவை உணர்ச்சியான பேச்சின் காரணமாக இயல்பாக வந்து அமைந்தவை என்பதை எளிதில் உணரலாம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களிலும் சொல் அலங்காரங்கள் குறைவே. சிறிது முயன்று அமைத்த சொல் அலங்காரமாகத் தோன்றும் சில அடிகள் மணிமேகலையில் உள்ளன :

வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப்
பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூம்பொழி லார்கை புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:59:16(இந்திய நேரம்)