தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 189 -

நேரே அவர்களின் புகழைப் பாடி மகிழ்விப்பவை. வேறு சில, தரம் குறைந்த காமச்சுவையான பாடல்களை இயற்றி அந்தச் சுவையால் அவர்களின் உள்ளங்களை மகிழ்வித்தவை. தஞ்சாவூரில் ஆண்ட மராட்டிய மன்னர்களின் ஆதரவிலும் அப்படிப்பட்ட நூல்கள் ஏற்பட்டன. அந்தச் சூழ்நிலைக்கு இடையே எந்த அரசரையும் செல்வரையும் பொருட்படுத்தாத சித்தர் என்னும் ஒருவகை ஞானிகள் வாழ்ந்து உயர்ந்த தத்துவப் பாடல்களை எளிய சொற்களால் பாடினார்கள். தத்துவராயர் முதலான ஞானிகளும் வாழ்ந்து உலகியல் கடந்த ஞானப் பாடல்கள் பாடினார்கள்.

அந்த அமைதியற்ற நூற்றாண்டுகளிலும் கவிதைவளம் அடியோடு வறண்டு போகவில்லை. இடையிடையே கவிஞர்கள் சிலர் தோன்றிப் புதிய இலக்கியச் செல்வம் சிறிய அளிவிலேனும் படைத்துத் தந்தார்கள். அருணகிரியாரும் வில்லிபுத்தூராரும் ஆயிரக்கணக்கான பாடல்கள் அளித்தார்கள். கற்பனைத் திறன் மிகுந்த காளமேகம் முதலான புலவர்கள் சுவையான பாடல்கள் இயற்றினார்கள். குமரகுருபரரும் சிவப்பிரகாசரும் உயர்ந்த புலமைச்செல்வம் நிரம்பியவர்கள். கலைச்சுவைக்காக இலக்கியம் படைக்காவிட்டாலும், சமய வளர்ச்சிக்காக அவர்கள் படைத்த நூல்களில் இலக்கியச் சுவையும் கலந்துள்ளது. அவர்கள் பலவகை நூல்கள் படைத்தவர்கள். முயன்றிருந்தால், ஒப்பற்ற பெரிய காப்பியங்களையும் அவர்கள் இயற்றியிருக்கமுடியும். அமைதியற்ற அரசியல் சூழ்நிலை நாட்டில் இருந்தபோதிலும், இலக்கியப் படைப்பு இடையறாமால் நடைபெற்றுவந்ததாகவே தோன்றுகிறது. அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் தொடர்ந்து பெற்றுவந்த வளர்ச்சியுடன் நன்கு வேரூன்றித் தழைத்திருந்த காரணத்தால், அந்தச் சில நூற்றாண்டுகளின் அரசியல் குழப்பம் அந்த இலக்கியச் சோலையைப் பெரிதும் தாக்கவில்லை. வழக்கம்போல் பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பெரும் பயன் தராவிட்டாலும், சோலையின் பசுமை அடியோடு மாறிப்போகவில்லை; புதிய தளிர்கள் விட்டன. இலைகள் தழைத்தன; அரும்புகள் அரும்பின; சிற்சில பூக்களேனும் பூத்தன; சிறுசிறு அளவிலேனும் காய்களும் கனிகளும் காணப்பட்டன.

சித்தர் பாடல்கள்

இந்தக் காலத்தில் சித்தர்கள் என்ற பெயரால் ஞானிகள் சிலர் தோன்றித் தம் அனுபவ உணர்வுகளை எளிய தமிழால் பாடினார்கள். இந்தக் காலத்திற்கு முன்னமே வாழ்ந்த (ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த) திருமூலர் முதலானவர்களையும் இந்தச் சித்தர்களோடு சேர்த்துக் கூறுவது உண்டு. அகத்தியர் என்ற பழம் புலவரையும் சித்தர் எனக் கருதுவோர் உண்டு.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:00:23(இந்திய நேரம்)