தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 190 -

தமிழிலக்கண ஆசிரியராகிய அந்தப் பழைய அகத்தியர் வேறு; சித்த மருத்துவர்களுள் ஒருவராகக் கருதப்படும் அகத்தியர் வேறு. இந்தச் சித்தர்களுள் பெரும்பாலோர் சைவர்கள் ஆயினும், பொதுவாக இவர்கள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவர்கள்; மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராதவர்கள்; சடங்குகளையும் சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளையும் போற்றாதவர்கள். தம் வாழ்க்கை அனுபவங்களால் கண்டறிந்த உண்மைகளைமட்டுமே தெளிவாக எடுத்துச் சொல்வது இவர்களின் நோக்கம். இவர்கள் தத்துவ ஞானிகள்; மெய்யுணர்வு பெற்றவர்கள். இவர்களில் சிலர் யோகிகளாய்ச் சிறப்புற்றவர்கள்; சிலர் மருத்துவர்களாய் விளங்கியவர்கள். இவர்களின் வழியில் வளர்ந்த தமிழ் மருத்துவக் கலை சித்த மருத்துவம் எனப் பெயர் பெற்றது. இவர்கள் பழைய தமிழ் இலக்கண மரபுகளையும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கற்றறிந்த புலவர்களுக்காக என்று பாடல்கள் இயற்ற விரும்பவில்லை. பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் பாடல்கள் இயற்ற விரும்பிய காரணத்தால், நாட்டுப் பாடல்களில் கண்ட பல செய்யுள் வடிவங்களைப் பயன்படுத்தி எளிய பேச்சுவழக்கு சொற்களைக் கையாண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சிலருடைய பாடல்கள் மறைபொருள் உடையவை. வெளிப்படையாகப் பார்க்கும்போது எளிய பொருள் ஒன்று தோன்றும். ஆழ்ந்து கற்றால் உட்பொருள் ஒன்று உணரப்படும். மருந்து பற்றிய பாடல்களில் ஒவ்வொரு மூலிகைக்கும் வெவ்வேறு பெயர் ஒன்று குறிப்பிட்டிருக்கும். சைவம் என்னும் சொல் தாளிசபத்திரத்தைக் குறிக்கும்; சரசுவதி என்பது வல்லாரைக் கீரையைக் குறிக்கும். இவ்வாறு சொற்கள் வெவ்வேறு பொருளில் வழங்கியதால், பாடல்களைப் படித்து நேரே பயன்பெற முடியாது. மரபு வழியில் கற்றுத்தேர்ந்தவர்களின் வாயிலாகவே பயன்பெற முடியும்.

சித்தர் பாடல்களை இன்றும் தெருவில் பாடிச் செல்வோர் உண்டு. பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அழுகணிச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர் முதலானவர்களின் பாடல்களை ஆர்வத்துடன் படிப்பவரும் பாடுவோரும் இன்றும் உள்ளனர்.

ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம்
வரைஓட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே

என்பது பாம்பாட்டிச் சித்தர் பாடல். மனித உடம்பின் தோற்றத்தையும் பயனற்ற தன்மையையும் கூறுவன இந்த அடிகள். இடைக்காட்டுச் சித்தர் என்பவரின் பாடல்கள் பசுமேய்க்கும் இடையர்கள் பசுவைப் பார்த்தும்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:00:40(இந்திய நேரம்)