Primary tabs
அந்தக் கவிஞர்களின் திறமையை உணர்ந்து உண்மையைத் தெளிந்த பிறகே அரசன் புகழேந்தியைச் சிறையிலிருந்து விடுவித்தான் என்றும் கதைகள் சொல்லும். அந்தக் கதைகளில் சில பாடல்களும் பிற்காலத்தாரால் புனைந்து சேர்க்கப்பட்டுள்ளன. அவைகளும் சுவையான பாடல்களே. நளவெண்பாவில் உள்ள வெண்பாக்கள் 424. அந்தப் பாடல்கள் எல்லாம் இனிய ஓட்டம் உள்ள நடையில் அமைந்தவை. தட்டுத் தடை இல்லாமல் சொற்கள் ஓடிவந்து புலவர்க்கு ஏவல் செய்வனபோல் பாடல்கள் இயல்பாக அமைந்துள்ளன. எளிய நடையிலும் உள்ளன. ஆகையால், பிற்காலத்தில் ‘வெண்பாவில் புகழேந்தி’ என்ற பாராட்டு அவருக்குக் கிடைத்தது. தமயந்தி சுயம்வர மண்டபத்திற்குள் வரும் காட்சியைக் கூறும் இடத்தில், மன்னர்களின் கண்களாகிய தாமரை மலர்கள் பூத்த சுயம்வர மண்டபத்தில் வெள்ளைச் சிறகுகளை உடைய அன்னப்பறவை செந்தாமரைப் பொய்கையில் செல்வதைப் போல் வந்தாள் என்கிறார். நாட்டை இழந்து தமயந்தியுடன் காட்டை அடைந்த நளன், நள்ளிரவில் அவள் உறங்கிக்கொண்டிருந்தபோது இருவரும் அணிந்திருந்த ஒற்றையாடையைக் கத்தியால் அரிவதைக் கூறும் புலவர், அந்த ஒற்றையாடையைமட்டும் அல்லாமல், ஓருயிராக இருந்த நிலையையும் அரிவதாகவும், தன் அன்பை முற்றும் முதலோடும் அரிவதாகவும் எடுத்துரைக்கின்றார். தம்மைப் போற்றிய சந்திரன்சுவர்க்கி என்னும் சிற்றரசனை நளவெண்பாவில் ஐந்து இடங்களில் நன்றியுணர்வோடு புகழ்ந்துள்ளார்.
பூஞ்சோலையில் பெண்கள் மலர் பறிக்கும் காட்சியைப் புகழேந்தி வருணிக்கிறார். அருஞ்சொல் ஒன்றும் இல்லாமல், பலர்க்கும் தெரிந்த எளிய சொற்களாலேயே ஒரு சிறு காட்சியை - எல்லோரும் நாளும் கண்டுவரும் சாதாரணக் காட்சியை - நயமாகக் கூறுகிறார். ஒரு சிறுமரத்தின் கொம்பில் உள்ள பூக்களைப் பறிப்பதற்காகப் பெண்கள் அந்தக் கொம்பை வளைக்கிறார்களாம். வளைக்கிறார்கள் என்றும் கூறவில்லை; தொடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்களின் கை தீண்டியவுடன் அந்தக் கொம்பு வளைந்து அவர்களின் காலில் சாய்ந்து வணங்குகிறதாம். பெண்களின் கை தீண்டினால் வணங்காதவர்கள் யார் என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு பல பாடல்களில் கதையே ஆனாலும், வருணனையே ஆனாலும், எளிய நடையில் நயமாகச் சொல்லும் திறன் மிக்கவர் புகழேந்தி.