Primary tabs
விடாமல் கூடியவரையில் சுருக்கித் திறம்படத் தமிழில் தந்த புலவர் அவர். இசை நயம் உடைய சந்தப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அவர். அத்தகைய பாடல்களை இயற்றுவதற்கு உரியவாறு தமிழோடு வடசொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார்.
அருணகிரியார்
வில்லிபுத்தூரார்போல் தமிழ்ச் செய்யுள்களில் மிகுதியான வடசொற்களைக் கலந்த மற்றொரு தமிழ்ப்புலவர் அருணகிரிநாதர் என்பவர். சந்தப் பாடல்களைப் பாடுவதில் இணையற்று விளங்கியவர் அவர். அவர் பாடியுள்ள மூவாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற நூலாக உள்ளன. எல்லாம் முருகக் கடவுள்மேல் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் ஆகும். வெவ்வேறு வகையான சந்தங்களும் இசையமைப்புகளும் உடைய அவை, இசையுலகில் லயம் என்னும் தாளவகைகள் நிறைந்த களஞ்சியமாகப் போற்றப்படுகின்றன. அத்தனை வகையான வேறுபாடுகள் நிறைந்த இசைப் பாடல்கள் வேறு எங்கும் இல்லை என்று இசையறிஞர்கள் போற்றிக் கூறுகிறார்கள். இன்றும், தமிழ் இசையரங்குகளில் திருப்புகழ்ப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. தேவார காலத்திற்குப் பிறகு பாடப்பட்ட பக்திப் பாடல்களுள் மிக்க புகழ் பெற்று விளங்கி வருபவை திருப்புகழ்ப் பாடல்களே ஆகும். பெரும்பாலான பாடல்களில், முன்பகுதியில் வேசையர்களின் சிற்றின்பக் கவர்ச்சியை வெறுக்கும் வெறுப்பும், பின்பகுதியில் முருகனுடைய அற்புதத் திருவிளையாடல்கள்பற்றிய புராணக் கதைகளும் அந்தந்தத் தலங்களின் பெருமைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. அவர் இயற்றிய கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி என்பவை பக்திச்சுவை நிரம்பியவை. கந்தரந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு என்பவை அவருடைய மற்ற நூல்கள்.
நளவெண்பா
வடமொழியில் பாரதத்தில் உள்ள நளன் என்னும் அரசனுடைய கதையைத் தமிழில் அழகான வெண்பாவால் இயற்றியவர் புகழேந்தி (16-ஆம் நூற்றாண்டு), அவர் ஒட்டக்கூத்தரின் காலத்தில் இருந்தவர் என்றும், பாண்டி நாட்டு இளவரசியைச் சோழன் மணந்துகொண்டபோது மணமகளின் சீதனப் பொருள்களோடு சேர்ந்து சோழநாட்டு அரண்மனைக்கு வந்தவர் என்றும், வந்த இடத்தில் அவர்க்குத் தீங்கான பல செயல்களை ஒட்டக்கூத்தர் செய்தார் என்றும், சிறையில் இடுமாறு செய்தார் என்றும், புகழேந்தியிடம் சிறைக் கைதிகள் சிலர் தமிழ் கற்றுக் கவிஞர்கள் ஆனார்கள் என்றும்,