Primary tabs
அவருடைய அகவல் பாக்களின் நடை, எளிமையும் தெளிவும் உடையது. உலக வாழ்க்கையில் செய்யத்தக்க கடமைகளைச் செம்மையாகச் செய்து, உள்ளத்தில்மட்டும் கடவுளின் நினைவுகொண்டால் போதும் என்பது அவருடைய கருத்து. சிந்தையைச் சிவனிடம் வைத்திருப்பதால், இல்வாழ்க்கையில் மனைவி மக்களோடு இன்பமாக வாழும் வாழ்வையும் இழக்கவில்லை, இறந்த பின் பெறும் முத்தியையும் இழக்கவில்லை என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
அந்தப் பாடல்கள் தவிர, பட்டினத்துப்பிள்ளையார் பாடல் திரட்டு என்ற புத்தகம் ஒன்று உள்ளது. இந்த நூலில் உள்ள பாடல்களே மக்களிடம் பரவியுள்ளன. இவற்றைப் பாடியவர் அதே ஊரில் பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வேறொருவர். அவருடைய பாடல்கள் எளிமையானவை; பேச்சு வழக்குச் சொற்கள் பல கொண்டவை; உணர்ச்சி மிகுந்தவை. அவர் கடுமையான துறவறம் மேற்கொண்ட துறவி; இல்வாழ்க்கையைப் பழித்தும் உலகவாழ்வை வெறுத்தும் பாடிய பாடல்கள் பல இந்த நூலில் உள்ளன. பெற்ற தாயிடம் பேரன்பு கொண்டவர் என்பது, தாய் இறந்தபோது அவர் நெஞ்சம் நெகிழ்ந்து, உருகிப் பாடிய பாடல்களால் தெரிகிறது. அந்தப் பாடல்களை இன்றும் பலர் பாடி உருகுகிறார்கள். அவரைப்பற்றி வழங்கும் கதைகள் அவருடைய கடுமையான துறவறம்பற்றி விளக்குகின்றன. பாடல்களும் அதை மெய்ப்பிக்கின்றன.
பட்டினத்தாரின் மாணவராக இருந்து உயர்நிலை பெற்றவர் பத்திரகிரியார். துளுவநாட்டு மன்னராக இருந்து பிறகு பட்டினத்தாரிடம் வந்து துறவியானார் என்று சொல்லுவார். அவர் பாடல்கள் ‘பத்திரகிரியார் புலம்பல்’ என்ற தொகுப்பாக உள்ளன. தத்துவக் கருத்துகள் நிரம்பிய பாடல்கள் அவை. இரண்டு அடி உள்ள பாடல்களில் தம் உணர்வுகளையும் ஏக்கங்களையும் உருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
பாரதம்
வில்லிபுத்தூரார் பாரதத்தைத் தமிழில் நாலாயிரத்து முந்நூறு விருத்தப்பாவால் இயற்றினார். அவருடைய பாரதம் இலக்கிய உலகில் இடம்பெற்று வாழ்கிறது. பாடல்கள் நல்ல ஓட்டம் உள்ள நடையில் அமைந்தவை. போர்க்கள நிகழ்ச்சிகளைப் பாடும் இடத்தில் நடை மிக மிடுக்காகச் செல்கிறது; போரின் வேகத்தை நடையே புலப்படுத்துவதாக உள்ளது. அவ்வாறே வியப்பு அவலம் முதலான சுவைமிகுந்த நிகழ்ச்சிகளைப் புலப்படுத்தும் இடங்களிலும், அந்தந்த உணர்ச்சிக்கு ஏற்றவாறு நடையின் இயக்கம் உள்ளது. பாரதக் கதையில் உள்ள சுவையான பகுதிகளை எல்லாம்